தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் குறிப்பாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்திய ஊராட்சிகளிலும் மற்றும் கிராம ஊராட்சிகளிலும் கிராமப்புற நூலகங்கள் திறக்கப்பட்டன.
இவ்வாறு திறக்கப்பட்ட நூலகங்கள் நாளடைவில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் மாறி வருகிறது. குறிப்பாக, கிராமப்புற நூலகங்களால் ஏழை மாணவ- மாணவியர்கள் சிரமமின்றி அனைத்து நாளிதழ்கள், வார இதழ்கள் மற்றும் பொது அறிவை வளர்க்கும் புத்தகங்களை படித்து நாட்டு நடப்புகள் மற்றும் பொது அறிவுகளை வளர்த்துக் கொண்டனர்.
கடந்த நான்கு வருடங்களாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புற நூலகங்கள் ஊராட்சியின் பழைய இரும்பு குடோனாகவும், மின்மோட்டார்களிலிருந்து கழற்றப்படும் குழாய்கள், பைப்புகள் மற்றும் மின்மோட்டார்கள் தெருவிளக்குகளை போட்டு வைக்கும் குடோன்களாக மாற்றி வருகின்றன. குறிப்பாக, ஆத்தூர் ஒன்றியம், அம்பாத்துரை ஊராட்சியில் ஊராட்சி நூலகம், நடுப்பட்டியில் உள்ளது.
தற்போது அந்த நூலகம் ஊராட்சியில் பணிபுரியும் உறவினர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த நூலகம் முதியோர் இல்லமாகவும், சமையல் கூடமாகவும் மாறி வருகிறது. அலமாரியில் புத்தகங்கள் இருக்க மறுபுறத்தில் சமையல் பாத்திரங்கள் காய்கறிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நடுப்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நூலகத்தின் உள்ளே சென்றால், அங்கு தங்கியிருக்கும் முதியோர் ஒருவர் குழந்தைகளை விரட்டி விடுவதாகவும் கூறப்படுகிறது.
கல்விக்கண்ணை திறக்கும் நூலகம் தற்போது ஆத்தூர் ஒன்றியத்தில் மாட்டுத்தொழுவமாகவும் முதியோர் இல்லமாகவும், மது அருந்தும் இடமாகவும் மாறி வருவது வேதனையாக உள்ளது. நூலகங்கள் பூட்டியே கிடப்பதால் விடுமுறை நாட்களை கழிப்பதற்கு மாணவ-மாணவியர்கள் கடும் சிரமப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புற நூலகங்களையும் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.