வனத்துறை என்கிற துறை செயல்படுகிறதா, வனத்துறை அதிகாரிகள் வேலை பார்க்கிறார்களா என்ற சந்தேகம் இறந்து கிடந்த மயிலை கண்ட பலருக்கு எழுந்தது.
கொள்ளிடக் கரையோரம் உள்ள படுகைகள் முழுவதும் அடர்ந்த காடுகளாகவே இருக்கிறது, பல இடங்கள் விவசாயிகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இடை, இடையே வனத்துறைக்கு சொந்தமான மரங்களும் இருக்கின்றன. அங்கு மயில் உள்ளிட்ட பறவைகள் வளர்ந்துவருகின்றன. காடுகள் முழுவதும் வறண்டு, பசுமையின்றி காணப்படுவதால் இறைதேடி மயில்கள் விளைநிலங்களை தேடிவந்துவிடுகின்றன. அப்படி வந்த 21 மயில்கள் பரிதாபமாக இருந்து கிடந்தது, அந்த தகவலைக்கூறுவதற்கு கூட வனத்துறை அதிகாரிகள் இல்லை என்பதுதான் அங்கு கூடியிருந்த மக்களின் வேதனை.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் மேல மதுரையை சேர்ந்த தேமுதிக ஒன்றிய செயலாளர் முருகனின் தோட்டத்தில் 21 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் பந்தநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்று விசாரணை செய்த காவல்துறையினர், வனம்சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யார் என்பது தெரியாமல் கண்டுபிடிக்கவே படாதபாடு பட்டு விட்டனர். பிறகு அதிகாரிகளுக்கு தகவல் கூறினர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், "சம்பா தாளடி அறுவடை முடிந்த பிறகு உளுந்து பயிரைத் தெளித்துள்ளனர். அதிக மகசூலுக்காகவும், பூச்சிகளை கட்டுப்படுத்தவும் ரசாயனம் கலந்த உரத்தைத் தெளித்திருந்த வயலில் மயில் மேய்ந்திருக்கலாம், இல்லை என்றால் இறைச்சிக்காக மயில்களை வேட்டையாடி இருக்கலாம்," என்றனர்.
அங்கு வராமலேயே பதில் கூறிய வனத்துறை அலுவலர் முருகானந்தமோ," அங்க மயில் தோகைகள் மட்டுமே கிடைக்கிறது, மயில்கள் இறந்திருக்க வாய்ப்பில்லை இது தவறானது," என்கிறார்.
இது குறித்து பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த முன்னாள் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ஒருகாலத்தில் வனத்துறைக்கு சொந்தமான மரத்தில் விறகு ஒடித்து, அதிகாரிகளிடம் சிக்கி, வழக்கில் இருந்து மீண்டுவர சொந்த சொத்தை வித்த சம்பவங்கள் நிறைய உண்டு. ஆனால் இன்றைய நிலைமை தலைகீழாக இருக்கிறது. பாரஸ்ட் என்கிற துறை இருக்கிறதா, அதற்கான அதிகாரிகள் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை, பாரஸ்ட்டுக்கு சொந்தமான மரங்கள் முழுவதும் கேட்பாரற்று கிடக்கிறது. காட்டில் வளரக்கூடிய விலங்குகளும், பறவைகளும் வேட்டையாடப்படுகின்றன. மயில் போன்ற பறவைகளின் கறி அதிக விலைக்கு போவதாலும் முக்கிய பிரமுகர்களுக்காகவும் வேட்டையாடப்படுவது அதிகரித்துவிட்டது. நெய்குப்பை பகுதியில் மயில்கள் தினசரி வேட்டையாடப்படுகிறது . ஆனால் யாரும் அதை கண்டுகொள்வதில்லை. வனத்துறை அதிகாரிகள் கரையோரத்தில் இருக்கின்ற மரங்களை கவனிப்பதை விட்டுவிட்டு, இருக்கும் மரம் அறுக்கும் சா மில்லில் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அங்கே கொடுக்கப்படும் விருந்துக்கு அடிபணிந்து கிடக்கின்றனர்". என்கிறார் ஆதங்கமாக.
வனத்துறை அமைச்சருக்கு வனத்துறை அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியவில்லையா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.