அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை சந்திக்காமல் உள்ளார். விரைவில் அவர் திமுகவில் இணைவார் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் செந்தில்பாலாஜி நேற்று கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அலுவலத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் பங்கேற்றவர்களில் சிலர் கூறும்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என செந்தில் பாலாஜி கூறினார். இதை தினகரன் ஏற்கவில்லை.
அமமுக சார்பில் தமிழகத்தில் பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடந்தன. இந்த பொதுக்கூட்டங்களுக்கு செந்தில் பாலாஜிதான் செலவு செய்தார். அந்த தொகையை தினகரன் இதுவரை தரவில்லை. செலவு செய்வதற்காகவே செந்தில்பாலாஜியை தினகரன் வைத்திருந்தார். நாங்கள் இதனை எடுத்து சொன்னவுடன் செந்தில் பாலாஜி புரிந்து கொண்டார்.
திமுகவில் இணையலாமா என்று எங்களிடம் கருத்து கேட்டார். நாங்கள் தாராளமாக இணையலாம் என்று கூறிவிட்டோம். எங்களை சந்தித்து கருத்து கேட்டதுபோல கரூர் மாவட்டம் முழுவதும் இன்று (புதன்கிழமை) ஆதரவாளர்களை சந்தித்து கருத்து கேட்டார் என்றனர்.