சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் வயதான பெற்றோர் குடியிருக்கும் வீட்டை பொக்லைன் வாகனம் மூலம் இடித்து தள்ளுவேன் என மிரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மல்லியக்கரை காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (65). இவருடைய மனைவி மல்லிகா (61). இவர்கள் இருவரும் திங்கள்கிழமை (ஏப். 4) காலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு வந்திருந்தனர். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த அவர்கள், திடீரென்று மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து, தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பாய்ந்து சென்று, அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து வீசினர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த தம்பதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ''எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு சொத்துகளை பிரித்துக் கொடுத்து விட்டோம்.
எங்கள் வீடு அருகே மூத்த மகன் குமரேசன் குடும்பத்துடன் வசித்து வருகிறான். நாங்கள் குடியிருந்து வரும் வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில், வீட்டை காலி செய்யும்படி தொல்லை கொடுத்து வருகிறான். வீட்டை காலி செய்யாவிட்டால் பொக்லைன் வண்டியை வைத்து வீட்டை இடித்து விடுவேன் என்று மிரட்டுகிறான். மருமகளும் மகனை தூண்டி விடுகிறார்.
நாங்கள் வீட்டை காலி செய்து விட்டால் எங்களுக்கு பிழைக்க வேறு போக்கிடம் இல்லை. எங்கு போவதென்றும் தெரியவில்லை. மகனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் விரக்தியால் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்து இங்கு வந்தோம். எங்கள் மூத்த மகன் மீதும், அவருடைய மனைவி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
இது தொடர்பாக அவர்கள் வைத்திருந்த புகார் மனுவை சேலம் நகர காவல்நிலைய காவல்துறையினர் பெற்றுக்கொண்டு, அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கோரிக்கை மனுக்கள் கொண்டு வரும் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறான செயலில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்மையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், நடப்பு வாரத்தின் முதல் நாளே வயதான தம்பதியர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.