தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி அடித்தட்டு மக்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைக் கொண்ட நெருக்கமான நகரம். மார்ச் மாத இறுதியில் கரோனா தொற்றுள்ளவர்கள் மூன்று பேர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்குப் பாதிப்பில்லாமல் நகரமிருந்தது.
வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களின் தொடர்பால் திடீரெனத் தொற்றுப் பரவியவர்களின் எண்ணிக்கை நகரத்தின் ஒரு பகுதியில் மட்டும் 38 என்ற எண்ணிக்கையளவில் உயர்ந்துவிட்டது. இதனால் நகரமே பதற்றமடைய தொற்று கண்ட 1, 9, 14, 19, 21 உள்ளிட்ட ஐந்து வார்டுகளின் தெருக்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த வார்டுகள் மூடி சீல் வைக்கப்பட்டன. அந்த மக்கள் எவரும் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நகரமே தனிமையாகத் துண்டிக்கப்பட்டு வெளித்தொடர்பே அற்றுப் போனநிலை. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.
கடந்த 40 நாட்களாக புளியங்குடி நகராட்சியின் ஆணையாளர் குமார்சிங் தலைமையிலான சுகாதாரப் பணியாளர்கள் நெருக்கடியான நேரத்திலும் சுகாதாரப் பணிகளைத் தீவிரமாகச் செய்ததால் தனிமைப் பகுதி மற்றும் பிற பகுதிகளின் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக கரோனா தொற்று இல்லாததால் நகரம் ஆறுதலடைந்தது.
இந்நிலையில் மார்ச் 25- ஆம் தேதி முதல் தொடர்ந்து நகரம் லாக்டவுணிலிருந்ததால் மாவட்டத்தின் பிற பகுதிகளைப் போன்று பொது முடக்கத்தில் தளர்வு செய்யப்பட்டது. இருப்பினும் புளியங்குடி மட்டும் தடையிலிருந்தது. இதனிடையே சூழ்நிலையயைச் சுட்டிக்காட்டிய புளியங்குடி நகர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கடைகளைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 17- ஆம் தேதி அவர்களுடன் சப் கலெக்டர் பழனிகுமார், தாசில்தார் அழகப்பராஜா டி.எஸ்.பி. சக்திவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் பாதிப்பிலிருந்த வார்டுகளைத் தவிர, மற்றப் பகுதி கடைகள் மறுநாள் முதல் திறக்கலாம் என்று பேசி முடிக்கப்பட்டது. அதன்படி படிப்படியாகத் திறக்கப்பட்டது. ஆனால் 14, 19, வார்டுகளில் பாதிக்கப்பட்டவைகளை மட்டும் தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக காந்தி பஜாரில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூடிவைத்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ரம்ஜான் பண்டிகைக்கான ஆடை, உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து காந்தி பஜார் வியாபாரிகள் முருகையா, சுந்தர் அலாவுதீன், உள்ளிட்ட வியாபாரிகள் அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும். தடைகூடாது என்று நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்திய ஆணையர் குமார்சிங் கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்பே போராட்டத்தைத் தற்காலிகமாக வியாபாரிகள் கைவிட்டுச் சென்றனர்.
நீண்ட நாள் தடை, வியாபாரிகளை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது.