திருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக்கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்த்த உய்யக்கொண்டான் கால்வாயும் ஆகும். இந்தக் கால்வாய்க்கு நீண்ட வரலாறும் பெருமையும் உண்டு.
விவசாயிகளுக்கான கொடையாகத் திகழ்ந்த இந்தக் கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ள காலத்தை மனதில் கொண்டு 1,200 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலத் தொழில்நுட்பத்தின் உதவியோடு வெட்டப்பட்டதாகும். மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஜராஜ சோழனின் சிறப்புப் பெயர்களில் ஒன்றான 'உய்யக்கொண்டான்' எனும் பெயரையே இக்கால்வாய்க்கு சூட்டினர்.
பேட்டைவாய்த் தலையிலிருந்து பிரிந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குள் 8 கிமீ பாய்ந்து வாழவந்தான்கோட்டை ஏரி வழியாக, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேராண்டி ஏரியுடன் முடிவடைகிறது இக்கால்வாய். சுமார் 71கி.மீ. நீளமும், 120 கிளை வாய்க்கால்களும் உடைய இந்த கால்வாய் மூலம் 32,742 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.
பலநூறு ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருந்து மக்களுக்கு பலன் கொடுத்து வந்த இந்தக் கால்வாய் காலப்போக்கில் நாகரிக வளர்ச்சியில் குப்பைகளும், கழிவுநீரும் கலந்து சாக்கடையாகவே மாறிவிட்டதுதான் பரிதாப நிலை. முப்போகம் விளையக் காரணமான இக்கால்வாயை இப்போது மூக்கை மூடி கடக்கிறார்கள் மக்கள். திருச்சி மாநகரின் பெரும்பகுதி கழிவுநீர் மற்றும் குப்பைகளின் புகலிடம் இக்கால்வாய்தான். இதன்விளைவு கரைகளை மறைத்து வளர்ந்த கருவேல மரங்கள். கால்வாய் முழுவதும் காட்டாமணக்கும், ஆகாயத்தாமரையுமாய் செடி, கொடிகள் மண்டிக் கிடக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில், 11 கோடி ரூபாய் செலவில் உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கப்படும் என அறிவித்தார். இந்த பணத்தில் இரண்டு பக்கமும் கிணறு போன்று சுவரை கட்டி விட்டனர். தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த இந்த பகுதியில் பெரிய சாக்கடை கிணறு போன்று மாறியது. சுவற்றில் வழியே தவறி விழுந்தவர்கள் தப்பிக்க முடியாமல் 3 பேர் இதுவரை இறந்து உள்ளனர். ஆடு, மாடுகளும் இது விழுந்து இறந்து உள்ளனர்.
இதற்கு இடையே ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி என்று உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் தொட்டிப்பாலம் (பழைய ஆறு கண் பாலம்) முதல் கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அமைந்து உள்ள செட்டிப்பாலம் வரை ரூ.17 கோடியே 56 லட்சத்தில் மேம்பாடு செய்வது நிதி ஒதுக்கி இதில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை மேம்பாடு செய்யும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கியது. தொட்டிப்பாலம் முதல் செட்டிப்பாலம் வரை உய்யக்கொண்டான் வாய்க்காலின் மொத்த நீளம் சுமார் 2½ கிலோ மீட்டர் ஆகும். 2½ கிலோ மீட்டர் நீளத்திற்கும் தற்போது உள்ள சாலையை 15 அடி அளவிற்கு அகலப்படுத்தி அதனை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தண்ணீர் வினோத்
இப்படி உய்யக்கொண்டான் பெயரில் பல கோடிகளை நிதியாக ஒதுக்கி அதை அழகுப்படுத்திக்கொண்டே இருந்தாலும். இதில் சாக்கடை கலக்கிறது இதை தடுக்க வேண்டும் என்றும் இந்த கால்வாயில் 34 இடங்களில் திருச்சியில் சாக்கடை மற்றும் கழிவு நீர் கலக்கிறது என்பதை இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்கிறார்.
இதே போன்று தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி சார்லஸ் நம்மிடம் உய்யக்கொண்டான் சென்னை கூவம் போல் மாறி வருகிறது கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று ஒரு உண்ணாவிரதம் இருந்தேன். திருச்சி மாநகராட்சியே எனக்கு கொடுத்த தகவலில் கழிவு நீர் கலப்பது உண்மை தான் என்னிடம் கொடுத்த பதிலை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் உள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும் திமுக முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கழிவு நீர் கலக்கிறது என்றும் அது தடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சொல்லியிருக்கிறார்.
இதற்கு கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்காக பாதாள சாக்கடை கட்டப்படும் என்று சொல்லயிருக்கிறார். இதற்கு 344 கோடி நிதி ஒதுக்கியிருக்கி இருக்கிறோம் என்கிறார். இதில் அந்த பழைய திட்டம் போல் ஊழலும் இல்லாமல் திட்டம் சரியாக நடந்தால் திருச்சி மக்களுக்கு பயன்பெறுவார்கள் என்றார்.