கோவையில் சட்ட விரோதமாக செயல்பட்ட குட்கா ஆலை தொடர்பாக வெளிப்படையாக விசாரணை நடத்தக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உட்பட திமுகவினர் இரண்டு பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த 2ஆம் தேதி கோவை விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது, காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கை இன்று ஒத்திவைத்து நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து வியாழக்கிழமை எம்.எல்.ஏ உள்பட இரண்டு பேர் ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் திமுகவினருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதாடினர். இதனை தொடர்ந்து வாதாடிய திமுக வழக்கறிஞர்கள் சட்ட மன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுகவினர் மீது ஆளும் அரசு திட்டமிட்டு பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறினர். மேலும் இந்த வழக்கில் சட்ட மன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குணசேகரன் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் தங்கராஜ் ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் இரண்டு பேரும் தினமும் சூலூர் காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என நிபந்தனையும் விதித்தார்.