மூன்று நாள் பயணமாகி டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், மாநில உரிமை, கல்வி உரிமை ஆகியவற்றைக் காக்க வேண்டுமென்றால், தனிமைப்பட்ட அரசியல் காரணங்களை மறந்து விட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.பா.ஜ.க.வை எதிர்ப்பதால் கட்சி மீதோ, தனிநபர்கள் மீதோ எந்த எதிர்ப்பும் இல்லை; அவர்களது கொள்கையை மட்டுமே எதிர்க்கிறேன். தேசிய அரசியலுக்கும், மாநில அரசியலுக்கும் பெரிய வேறுபாடில்லை. இரண்டும் தனித்தனியாக பிரிக்க முடியாதவை.
தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன் இருப்பதைப் போன்று, அனைத்து மாநில கட்சிகளுடனும் காங்கிரஸ் கட்சி இணக்கமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் நன்மைக்காக நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒன்றுபட்டு இருப்பதே நம்முடைய பலமாக கருத வேண்டும். தேசிய அரசியலில் திமுகவின் பங்கு எப்போதும் இருந்து வந்துள்ளது. பிரதமரை தேர்ந்தெடுப்பதிலிருந்து, குடியரசுத் தலைவர் வரை திமுகவின் பங்கு எப்போதும் இருந்துள்ளது. நீட் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது சரியல்ல.
தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணி சிறப்பாக அமைந்திருக்கிறது. நாங்கள் தேர்தல் நேரங்கள் தவிர மற்ற நேரங்களிலும் அந்தக் கூட்டணியாகவே இணைந்து செயல்படுகிறோம். அதுவே எங்களுடைய வெற்றிக்கு முக்கியமான பங்காக அமைந்திருக்கிறது. ஆகவே அதேபோன்று தேசியளவில் காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும்" என்றார்.