கடந்த 1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், காட்டூர் கிராமத்தில் பிறந்த பேராசிரியர் க. அன்பழகன் படிக்கின்ற காலத்தில் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளாலும், பேரறிஞர் அண்ணாவின் தமிழ் உணர்வு மிக்க பேச்சாற்றலாலும் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பள்ளிப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். 1944 முதல் 1957 ஆம் ஆண்டு வரையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற நாட்களிலும், துணைப் பேராசிரியராகப் பணியாற்றிய காலங்களிலும் திராவிட இயக்கத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கையில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர் ஆவார். 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 ஆண்டு தொடங்கி 1971 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும். தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் மக்கள் நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் பேராசிரியர் க. அன்பழகனுக்கு பெருமை சேர்க்கும் விதமாகத் தமிழக அரசின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் க. அன்பழகனின் உருவச் சிலையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (10.08.2023) காலை 10.00 மணியளவில் திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், பேராசிரியர் க. அன்பழகன் குடும்பத்தினர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.