Skip to main content

“21 மாதங்களாக ஆளும் அ.தி.மு.க அரசு தமிழக மக்களையும் - மாணவர்களையும் ஏமாற்றி, அவர்களுக்கு பச்சை துரோகம் செய்திருக்கின்றது”-மு.க.ஸ்டாலின் 

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

 

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் (10-07-2019)  நேற்று, நீட் தேர்வு விலக்கு மசோதாக்கள் குறித்து சட்டமன்றத்தில் பேசினார். அவர் பேசிய உரையின் விவரம் பின்வருமாறு:

ஸ்டாலின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே நேற்று முன்தினம் இதே அவையில் சட்டத்துறை அமைச்சர் நீட் பிரச்சினை பற்றி விவாதம் நடைபெற்ற நேரத்தில் சில விளக்கங்களை சொல்லி இருக்கின்றார்கள். எனவே அதுகுறித்து இந்த அவையின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்புவது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இதே சட்டமன்றத்தில் 01-07-2017 அன்று ஏகமனதாக 2 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது. அந்த இரண்டு மசோதா விற்கும் ஒப்புதல் வழங்குவதை நிறுத்தி வைத்த withheld குடியரசுத் தலைவர் அந்த இரு மசோதாக்களையும் திருப்பி அனுப்பியிருப்பதாக 22-09-2017 மத்திய அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

s

 

நேற்று முன்தினம் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள், முதலில் நிறுத்திவைக்கப்பட்டது என்றுதான் தெரிவித்தார்கள். இப்பொழுது நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள் என்று கூறினாரே தவிர, 2 மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்று இந்த அவையில் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு அனுப்பியிருக்கக்கூடிய கடிதம் Government of India, Ministry of Home Affairs என்ற துறையில் இருந்து இந்தக் கடிதம் அரசிற்கு வந்திருக்கின்றது. அதாவது, Secretariat, Law Department-ற்கு வந்துள்ளது. I am directed to refer to the State Government's letters dated 18-02-2017 on the subject mentioned and to return here with two authenticated copies each of both the bills wherein the Hon'ble President has with held is assent dated 18th September 2017. Signified there on under Article 201 of the Constitution of India. என்று கடிதம் வந்திருக்கின்றது. மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரே, இந்த அவைக்கு உண்மைத் தகவலை கொடுக்காமல் மறைத்து இருக்கின்றார் என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு.

 

அரசியல் சட்டப்பிரிவு 201-ன் கீழ் மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றார். அதே அரசியல் சட்டப் பிரிவின் படி, அப்படி திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் அவர்களின் செய்தியுடன் இந்தப் பேரவையில் 6 மாதத்திற்குள் வைத்து, மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம், அதே அரசியல் சட்டப் பிரிவு 201-ல் இந்த சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

 

ஆனால், மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு ஏறக்குறைய 19 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் இனி சட்டமன்றத்திலும், இந்த 2 மசோதாக்களை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பினை நம்முடைய தமிழக சட்டமன்றம் இழந்திருக்கின்றது. மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டப் பிறகும். குடியரசுத் தலைவர் அனுமதி தர வலியுறுத்துகின்றோம் என்று, கடந்த 19 மாதங்களாக தமிழக மக்களை இந்த அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, அ.தி.மு.க.வின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்விற்கு விளக்கம் பெறுவோம் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து நீங்கள் ஏமாற்றி இருக்கின்றீர்கள்.

 

இது தமிழக மக்களுக்கு நீட் தேர்வால் பாதிக்கப்படக்கூடிய கிராமப்புற மாணவர்கள் - நகரப்புற மாணவர்கள் அனைவருக்கும் இந்த அரசு செய்திருக்கக்கூடிய பச்சை துரோகம் என்பதை அழுத்தம் திருத்தமாக நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகின்றேன். எனவே, இதற்கு தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

 

குறுக்கீடு:

ஸ்டாலின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 6 மாதத்திற்கு பிறகு இந்த அவையில் வைத்து நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை நான் இங்கு தெளிவாக சொல்லி இருக்கின்றேன். ஆனால், இந்தக் கடிதம் வந்து 19 மாதங்கள் ஆகியிருக்கின்றது. எத்தனையோ முறை சட்டமன்றம் கூடியிருக்கின்றது. ஏன் இந்த அவையில் சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என்பது தான் என்னுடைய கேள்வி. அதனால்தான் சொல்கின்றேன் இதில் அவர்கள் தெளிவாக சொல்லி இருக்கின்றார்கள்.

 

6 மாதத்திற்கு பிறகு நிச்சயமாக இந்த சட்டமன்றத்தில் கொண்டு வருவதற்கான வாய்ப்பு கிடையாது என்பதை நான் சொல்லி இருக்கின்றேன். சட்டத்துறை அமைச்சர் அவர்கள் இன்றைக்கு விளக்கம் சொல்லுகின்றார்கள். ஆனால் இந்த விளக்கத்தை, நேற்றுமுன்தினம் நாங்கள் கேட்டதற்கு பிறகுதான், இந்த விளக்கத்தை எடுத்து சொல்லி இருக்கின்றீர்களே தவிர இடைப்பட்ட நேரத்தில் கூடியிருக்கக்க்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் ஏன் சொல்லவில்லை. என்பது தான் என்னுடைய கேள்வி. எனவே அவர் ராஜினாமா செய்வதற்கு நீங்கள் தயாரா என்று கேட்கின்றார். நான் இருக்கக்கூடிய விதிமுறை வைத்து நான் சொல்கின்றேன். அந்த அடிப்படையில்தான் இந்த கேள்வியை கேட்டிருக்கின்றேன். எனவே அமைச்சர் அவர்கள் ஏட்டிக்கு போட்டியாக பேசிக்கொண்டிருந்தால் இதனால் வாழ்வாதாரத்தில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றார்கள் தவிர வேறல்ல. எனவே இதை அவர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். என்றுதான் நான் சொல்லி இருக்கிறேன். அப்படி, அவர் இதனை சொல்லத் தவறிய காரணத்தினால் தான் பொறுப்பேற்றுக்கொண்டு ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்கிறேனே தவிர வேறல்ல.

 

குறுக்கீடு:

ஸ்டாலின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கு பலமுறை பேசியிருக்கின்றோம். பலமுறை நீங்களும் பதில் சொல்லி இருக்கின்றீர்கள் இல்லை என்று சொல்லவில்லை நேற்று முன் தினம் அமைச்சர் சொன்ன விளக்கம் என்ன? அதுதான் என்னுடைய கேள்வி, அதிலிருந்து இந்தக் கருத்து மாறுபட்ட இருக்கின்றதா, இல்லையா. எனவே இந்தக் கடிதம் வந்தவுடன் ஏன் இந்த அவையில் வைக்கவில்லை என்பது தான் என்னுடைய கேள்வி. எனவே சட்டத்துறை அமைச்சராக இருந்தாலும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தாலும் இங்கு நான் கேட்டிருக்கக்கூடிய கேள்விக்கு முறையான பதிலை சரியான விளக்கத்தை இந்த அவைக்கு தராத காரணத்தினால் அதைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கின்ற வகையில் வெளிநடப்பு செய்கிறோம்.
 

சார்ந்த செய்திகள்