தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (27.12.2019) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தின் தூத்துக்குடி, கருங்குளம், ஆழ்வார் திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட 7 யூனியன்களில் 1126 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்குத் தேர்தல் நடந்து வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வாக்காளரும் ஊராட்சி கவுன்சிலர், தலைவர், ஒன்றியக் கவுன்சிலர் மற்றும் மாவட்டக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நான்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 4 பதவிகளுக்கு 4 நிற வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற வாக்குச்சீட்டும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் 378 பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வாக்குச்சாவடிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார். இந்த மாவட்டத்தில் மதியம் 01.00 மணி நிலவரப்படி 39.08 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின என்கிறார் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரியான சீனிவாசன்.