மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் ஒலித்த மின் சங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பழுதாகிய நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று சங்கொலி எழுப்பப்பட்டது.
மதுரை உசிலம்பட்டி நகராட்சியில் அந்த பகுதி மக்களுக்கு வேளை நேரங்களை அறிவுறுத்துவதற்காக 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே சங்கொலி எழுப்பப்படும் முறை இருந்தது. இதற்காக மின் சங்கு ஒன்று அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தது. காலை 5 மணி, காலை 8 மணி, மதியம் ஒரு மணி, மாலை 5 மணி, இரவு 9 மணி என ஒவ்வொரு நாளும் ஐந்து முறை மின் சங்கு ஒலிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக அச்சேவை நிறுத்தப்பட்டது.
மின் சங்கை மீண்டும் சரி செய்து ஒலிக்க வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்திருந்த நிலையில், உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களாக மின் சங்கை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் உசிலம்பட்டி நகராட்சியில் 15 ஆண்டுகளுக்குப் பின்பு மின் சங்கு ஒலித்தது அங்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது.