கடலூர் மாவட்டம், நெய்வேலி வடக்கு வெள்ளூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளில் தபேலா வாசிக்கும் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விருத்தாசலத்தில் இசைக் கச்சேரியை முடித்துவிட்டு இன்று (14/08/2021) காலை அவரது சொந்த ஊரான நெய்வேலிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து சாம்பல் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக சென்ற லாரி, ஊமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கொண்டிருந்த ராஜேஷ் மீது மோதியது.
இதில் ராஜேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஊமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தால் உயிரிழுந்த ராஜேஷ் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மோதியதில், என்.எல்.சி. தொழிலாளி கோவிந்தன் என்பவர் உயிரிழந்ததால், அப்பகுதி பொதுமக்கள் 10 சாம்பல் லாரிகளை அடித்து நொறுக்கியும், 5 சாம்பல் லாரிகளை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், அச்சம்பவத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் 3 ஆவது நாளில் மீண்டும் சாம்பல் லாரியால் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திலிருந்து சாம்பல் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும், அவ்வாறு லாரிகள் அதிவேகமாக செல்வதால், இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ச்சியாக நடைபெறும் இச்சம்பவங்களுக்கு என்.எல்.சி. நிறுவனம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.