Skip to main content

சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தையை தீர்த்துக்கட்டிய மகன்; விசாரணையில் அம்பலமான உண்மை

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

son Conflict father for property dharmapuri

 

தர்மபுரி அருகே, சொத்துக்காக பெற்ற தந்தை என்றும் பாராமல் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய மகனையும், கூட்டாளிகளையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள தெற்கத்தியான்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (52). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சந்திராவுக்கு இரண்டு மகள்களும், திருமலை என்ற ஒரு மகனும் உள்ளனர். கடந்த 25 ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக சந்திரா குழந்தைகளுடன் பிரிந்து சென்று தர்மபுரியில் தனியாக வசித்து வருகிறார். அவருடைய பிள்ளைகள் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. முதல் மனைவி பிரிந்து சென்ற சில மாதங்களில் உள்ளூரைச் சேர்ந்த பிரியா என்பவரை முனியப்பன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். 

 

முனியப்பன், பசு மாடுகளுக்கு சினை ஊசி போடுவது தொடர்பாக குறுகிய கால பயிற்சியை முடித்துள்ளார். அதையடுத்து உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சினை ஊசி செலுத்தும் தொழில் செய்து வந்தார். அத்துடன், தனக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்து வந்தார்.  

 

இந்நிலையில் முதல் மனைவி மூலம் பிறந்த மகன் திருமலை (28), முனியப்பன் வசமுள்ள விவசாய நிலத்தில் பங்கு கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன் மறுத்துள்ளார். இதையடுத்து தந்தை மீது நீதிமன்றத்தில் திருமலை வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் முனியப்பனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் திருமலைக்கு அவருடைய தந்தை மீது வெறுப்பு அதிகமானது.  

 

இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி மாலை 6 மணியளவில் முனியப்பன் தனது இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதியில் உள்ள பால் சொஸைட்டிக்கு சென்று கொண்டிருந்தார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே, வீட்டின் அருகே உள்ள ஒரு ஒற்றையடி பாதையையொட்டி உள்ள 7 அடி பள்ளத்தில் முனியப்பன் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது. அவர் மீது இருசக்கர வாகனமும் கிடந்தது.  

 

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இது குறித்து கிருஷ்ணாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வில், முனியப்பன் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டதும், அவருடைய தலையில் பலத்த வெட்டுக்காயம் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையின் தீவிர விசாரணையில், சொத்து தகராறில் திருமலைதான், தந்தை என்றும் பாராமல் முனியப்பனை கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்ய திட்டமிட்டு, அந்த முயற்சியில் தோல்வி அடைந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.  

 

சொத்து தகராறு தொடர்பான வழக்கில் தந்தைக்கு சாதகமாக தீர்ப்பு வெளியான சில நாள்களிலேயே முனியப்பன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கூலிப்படையை வைத்து காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றிருக்கிறார். அப்போது அவர் லேசான காயத்துடன் தப்பிவிட்டார்.   அதன்பிறகும் கூலிப்படையினர் அவரைத் துரத்திச் சென்று கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது ஆள்கள் நடமாட்டம் இருந்ததால், கூலிப்படை கும்பல் தப்பிச் சென்றுவிட்டனர்.  

 

இந்நிலையில்தான், கடந்த 18 ஆம் தேதி மாலையில் முனியப்பன் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரை 5 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. விபத்தில் இறந்துவிட்டது போல சித்தரிப்பதற்காக அவரை 7 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு, சடலத்தின் மீது அவருடைய இருசக்கர வாகனத்தையும் போட்டுவிட்டு கொலையாளிகள் தலைமறைவாகிவிட்டனர்.  

 

இது ஒருபுறம் இருக்க, சடலம் கிடந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் ஒரு கார் கேட்பாரற்றுக் கிடந்தது. அந்த காரை காவல்துறையினர் பறிமுதல் செய்து, காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த கார் கொலையாளிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவாகிவிட்ட திருமலை மற்றும் கூட்டாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்