/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/babarmani.jpg)
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அதன் பின்னர், பாபர் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டடப்பணிகள் தொடங்கி கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தரிசனம் நடைபெற்று வருகிறது.
அதே போல், கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவகர்கள் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்தனர். அதில் பற்றி எரிந்த நெருப்பில் சிக்கிக் கொண்ட பொதுமக்களும், கரசேவகர்களும் வெளியே வரமுடியாமல் அலறித் துடித்தார்கள். இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள், 27 பெண்கள் என்று மொத்தம் 59 பேர் பலியானார்கள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்ற செய்தி குஜராத் முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அப்படி அந்த செய்தி பரவியதும் குஜராத் மாநிலம் முழுவதும் ரத்தக் காடாக மாறத் தொடங்கியது. கோத்ராவில் தொடங்கி குஜராத் முழுவதும் நடந்த அந்தக் கலவரம் சுமார் மூன்று மாதம் வரை நீடித்தது.
இந்த நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரித்த 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தக்கத்தில், குஜராத் கலவரம் பற்றியும், பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் குறித்தும், பாபர் மசூதி இடிப்பு குறித்தும் பல தகவல்கள் மாற்றப்பட்டுள்ளன. குஜராத்தில் நடந்த கலவரம் குறித்த பாடத்தில் முன்பு இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்று இருந்ததை பல சமூகத்தைச் சேர்ந்த பலரும் பலியானதாக கூறப்பட்டுள்ளது. அதே போல், பாபர் மசூதி இடிப்பு குறித்தும் பல தகவல்கள் மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய திருத்தங்கள் கடும் சர்ச்சையாகியுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் வரலாற்றை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அதே வேளையில், என்.சி.இ.ஆர்.டி இயக்குநர் தினேஷ் பிரசாத் ஒரு செய்தி நிறுவனனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பள்ளி பாடப்புத்தகங்களில் ஏன் கலவரம் பற்றி கற்பிக்க வேண்டும்? நாங்கள் நேர்மறையான குடிமக்களை உருவாக்க விரும்புகிறோம், வன்முறை மற்றும் மனச்சோர்வடைந்த நபர்களை அல்ல. நம் மாணவர்களுக்கு அவர்கள் புண்படுத்தும் வகையில் கற்பிக்க வேண்டுமா, சமூகத்தில் வெறுப்பை உண்டாக்க வேண்டுமா அல்லது வெறுப்புக்கு ஆளாக வேண்டுமா? அதுதான் கல்வியின் நோக்கமா?
இப்படிப்பட்ட சிறு குழந்தைகளுக்கு கலவரம் பற்றி சொல்லிக் கொடுப்போமா? அவர்கள் வளர்ந்ததும் அதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம், ஆனால் ஏன் பள்ளி பாடப்புத்தகங்கள். அவர்கள் வளரும்போது என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்? ராமர் கோவில், பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தால், அதை நமது பாடப்புத்தகங்களில் சேர்க்கக் கூடாதா, அதில் என்ன பிரச்சனை? புதிய புதுப்பிப்புகளைச் சேர்த்துள்ளோம். புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கினால், பழங்கால வளர்ச்சிகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்களைச் சேர்ப்பது நமது கடமையாகும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)