Skip to main content

தலைமைக் காவலர் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்; வேலையை முடித்த கும்பல் - விசாரணையில் பகீர்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
gang of robbers accompanied by a police escort

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையன் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுந்தரமூர்த்தி. இவர் மறைவையடுத்து அவரது இரண்டு மகள்கள் அவரது மனைவி ராஜாமணி(72) வீட்டில் தனியாக வசித்து வருகிறார். ராஜாமணி கடந்த 10-ஆம் தேதி இரவு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் நோய்க்கான மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபொழுது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது, அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜாமணி உள்ளே சென்று பார்த்த பொழுது தனி அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 57 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இது பற்றித் தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த வீட்டில் உடைக்கப்பட்ட பீரோவில் இருந்த விரல் ரேகைகள் ஆய்வுக்கு அனுப்பிய நிலையில் அதன் முடிவில் அந்த விரல் ரேகைகள் உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாரி என்கிற மாரிமுத்து மற்றும் அவருடன் சிறையில் இருந்த சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த உதயா ஆகிய இருவரின் விரல் ரேகைகள் ஒத்துப்போன நிலையில் இவர்கள் இருவரையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

gang of robbers accompanied by a police escort
உதயா

தொடர்ந்து இவர்கள் இருவரின் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் தொப்பையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கடலூர் மத்திய சிறை தலைமைக் காவலர் ஞானமணி என்பவர் மாரிமுத்து மற்றும் உதயா ஆகிய இருவரிடம் அதிக அளவில் பேசியுள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடலூர் மத்திய சிறை தலைமைக் காவலர் ஞானமணியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கொள்ளை சம்பவும் நடந்ததையும் தனது மூலம் அது நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார். 

மாரிமுத்து மற்றும் உதயா ஆகிய இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் கடலூர் மத்திய சிறையில் இருந்த பொழுது ஞானமணிக்கு அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதே போல் பண்ருட்டியை அடுத்த பெரிய காட்டுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், எடுத்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், விருத்தாசலம் இந்திரா நகரைச் சேர்ந்த கபார்தீன், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் எனச் சிறையில் இருந்த 6 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு ஞானமணியுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

அப்பொழுது எந்த வீட்டில் அதிகம் பணம் இருக்கும் எங்கு சுலபமாக கொள்ளையடிக்கலாம் என்று ஆறு பேருடன் ஞானமணி ஆலோசனை நடத்திய நிலையில் 72 வயது மூதாட்டியான ஞானமணி வீட்டின் எதிர் வீட்டில் உள்ள ராஜாமணி வீட்டில் இரவு நேரத்தில் அவர் தனியாக இருப்பார் என்றும் அதனைப் பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் நிலம் விற்று வைத்துள்ள கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கொள்ளையடிக்கலாம் எனவும் திட்டமிட்டுள்ளனர்.

இவர்களின் திட்டத்தின்படி கடந்த 10ஆம் தேதி இரவு சுமார் 11மணி அளவில் ஞானமணியைத் தவிர்த்து மற்ற ஆறு பேரும் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தனி அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 57 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

gang of robbers accompanied by a police escort

இதையடுத்து ஞான மணியை வைத்து மாரிமுத்து உள்ளிட்ட 6 நபர்கள் செல்லும் இடங்களை அடுத்தடுத்து ஆய்வு செய்த பொழுது அவர்கள் சனிக்கிழமை இரவு கூவாகம் நத்தம் ஏரிக்கரை பகுதியில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பங்கு பிரித்து கொண்டு இருந்த போது மாரிமுத்து உள்ளிட்ட ஆறு பேரையும் சுற்றி வளைத்தனர். அதில் மோகன்தாஸ் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மற்ற ஆறு நபர்கள் போலீஸ் பிடியில் சிக்கினார். அவர்களிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் அவர்கள் 50 சவரன் தங்க நகைகளை பல்வேறு நபர்களிடம் கொடுத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 7 சவரன் தங்க நகைகளை விற்பனை செய்து வைத்திருந்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணமும், அவர்கள் பல்வேறு நபர்களிடம் கொடுத்து வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகளையும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட மூன்று இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள மோகன்தாஸை தேடி வருகின்றனர். 

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆறு நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்களை வைத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சமய்சிங்மீனா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கடந்த 10-ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக டிஐஜி திஷாமிட்டல் உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ் மேற்பார்வையில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசாரை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு குறுகிய காலத்தில் குற்றவாளிகளைக் கைது செய்தும் கொள்ளைப் போன 50 சவரன் தங்க நகை மற்றும் 7 சவரன் தங்க நகைக்கான ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்றும் இதற்காக கடுமையாக உழைத்த போலீசாரை பாராட்டுவதாகவும் கூறினார்.

தொடர்ந்து உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இதற்கென்று காவல் நிலையம் அமைக்கப்படுமா என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் இது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி குற்ற சம்பவங்களைத் தடுக்க தனிப்படை அமைக்கப்படும் என கூறினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

120 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sp recovered 120 stolen cell phones and handed them over to their owners.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 120 செல்போன்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்று. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேலும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் செல்போன் தவறவிட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க முன் வர வேண்டும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் வாலாஜாபேட்டையில் செல்போன் தவறவிட்ட வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 Police arrest to Former Minister MR Vijayabaskar

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய வடமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். வட மாநிலங்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.