" கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நடந்த பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு, இளைஞன் ஒருவனை நையப்புடைத்து வஞ்சம் தீர்த்துக்கொண்ட காவல்துறை எஸ்.ஐ.யை இடமாற்றம் செய்துள்ளார் மாவட்ட எஸ்.பி.யான முரளி ராம்பா.
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட மேல்மாந்தை பெத்தானாட்சியம்மன் கோவில். கடந்த மார்ச் மாதம் இங்கு பூக்குழி திருவிழா நடைபெற, அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த திருவிழாவின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மீது கதிரவன் என்ற இளைஞர் மோதிவிட, " எப்படி..? போலீஸார் மோதலாம்.." என போலீஸார் லத்தியை உயர்த்திய வேளையில், அங்கிருந்த பெரியவர்கள் தலையிட்டு, இளைஞர்களை கண்டித்ததுடன், போலீஸாரிடம் மன்னிப்புக் கேட்டும் இளைஞர்களை ஓரமாக சென்று ஆடும்படி கேட்டு கொண்டதற்கிணங்க, நிலைமை அப்போது சீரானது.
எனினும், ஆட்டம் போட்ட இளைஞர் கதிரவனை படம் எடுத்து வைத்திருந்த போலீஸார், இப்போது, தங்களது வேலையை காட்டி உள்ளனர். அதாவது, கடந்த வாரம் அதே பெத்தனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மாத திருவிழா நடைபெற்றது. பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல் முருகன், இந்த முறை கும்மிப்பாட்டுக்கு நடனமாடிய இளைஞர் கதிரவனுடன் தகராறு செய்ததோடு, அவரை மட்டும் விசாரணை என்ற பெயரில் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றிருக்கிறார். காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்த உதவி ஆய்வாளர், கதிரவனின் சாதியை சொல்லியும் இழிவாக திட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த கதிரவன், "தம்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியம் நிறைவேறாமல் போய்விடுமோ..? என்ற அச்சத்தில் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, தென் மாவட்டங்களில் குறிப்பாக விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், குறிப்பிட்ட இரு சமூகத்திற்கு எப்பவும் ஆகாது. அதே மாதிரி தான் இந்த மாவட்டங்களில் பணியாற்றும் போலீஸாருக்கும் இடையேயும் சாதிய பாகுபாடு உண்டு. இப்போது தாக்குதலுக்கு ஆளான இளைஞர் பட்டியல் சாதியை சேர்ந்தவர். அவரை அடித்து உதைத்த காவல் உதவி ஆய்வாளர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், மீண்டும் கொடியன்குளம் போன்ற சாதி கலவரத்திற்கு வழி வகுத்துவிடுமோ..? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பிரச்சனைக்கு ஆளான உதவி ஆய்வாளர் செந்தில்வேல் முருகனை ஆயுதப்படைக்கு மாற்றி இடமாற்றம் செய்துள்ளார் மாவட்ட எஸ்.பி.முரளி ராம்பா. எனினும் பிரச்சனை தற்பொழுது பூதகரமாகி வருவதால் பரப்பரப்பாகியுள்ளது.