தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான ஏரி, குளம், குட்டை, கால்வாய் போன்ற தண்ணீரைச் சேமித்து வைக்கும் நீர்நிலைகள் பல வருடங்களாக மராமத்துச் செய்யாமல் தண்ணீர் தேங்கவில்லை. இதனால் வறட்சி தாண்டவமாடியது, சில இடங்களில் நிலத்தடி நீரும் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றுவிட்டது.
நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழே போனதால் இனிமேல் குடிக்கக் கூட தண்ணீர் கிடைப்பது அறிதாகிவிடும் என்ற நிலையில் தான் புதுக்கோட்டை, தஞ்சாவூர் கடைமடைப் பாசனப் பகுதிகளை உள்ளடக்கி கைஃபா என்ற அமைப்பை உருவாக்கிய இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள், இவர்களுடைய பொருளாதார உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 70 பெரிய நீர்நிலைகளைச் சீரமைத்து தண்ணீரை நிரப்பினார்கள்.
இதன் பலனாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதனால் இனி வரும் வருடங்களில் இன்னும் நிறைய நீர்நிலைகளைச் சீரமைக்க உறுதி எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ஆதனூர் கிராமத்தில் உள்ள பெரிய குளத்தை கைஃபா இளைஞர்கள் சீரமைத்தனர்.
சீரமைப்பிற்குப் பிறகு குளம் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. குளம் நிரம்பியதால் நிலத்தடி நீரும் வேகமாக மேலே வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சுமார் 150 அடிக்கு கீழே இருந்த தண்ணீர் இப்போது பொங்கி ஊற்றுகிறது.
கடந்த சில மாதம் முன்பு 170 அடியில்இருந்து தண்ணீர் எடுத்துள்ளனர். ஆனால் இப்போது கடந்த ஒரு வாரமாகத் தொடர் மழையாலும் குளம் நிரம்பியுள்ளதாலும் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீர் பொங்கி ஊற்றிக் கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோடையிலும் விவசாயம் செய்வதற்கேற்ப நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர். இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நீர்நிலைகளைச் சீரமைத்து தண்ணீரைத் தேக்கினால் அனைத்துக் கிராமங்களிலும் நிலத்தடி நீரை உயர்த்தலாம்.