விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வடக்கு குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார்(29). இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியாருக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் வேறு ஒரு தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்த செந்தமிழ்(29), கலையரசன்(43), பார்த்திபன்(39), சுரேஷ்(37), சுதாகர்(39), சிவனேசன்(43) ஆகியோருக்கும் இடையே ஆம்புலன்ஸ் ஓட்டுவது சம்பந்தமாகத் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் எதிரொலியாகக் கடந்த 06.06.2019 அன்று ஏற்பட்ட தகராற்றின்போது தினேஷ் குமாரை, செந்தமிழ் தலைமையிலான ஏழு பேரும் சேர்ந்து தாக்கியதோடு பீர் பாட்டிலால் தினேஷ் குமார் வயிற்றில் குத்தியுள்ளனர். இதில் தினேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ்குமாரின் சகோதரர் திவாகர் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த விக்கிரவாண்டி போலீசார், தினேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட செந்தமிழ் தலைமையிலான ஏழு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏழு பேரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில், இது சம்பந்தமான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி பூர்ணிமா தீர்ப்பளித்தார்.
அந்தத் தீர்ப்பில், தினேஷ் குமாரை இரண்டு பேர் தாக்கி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இந்தக் கொலை செய்த குற்றத்திற்காக செந்தமிழ் உள்ளிட்ட ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் ஏழு பேரும் தலா 2000 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் இயக்குவதில் ஏற்பட்ட மோதலில் நடைபெற்ற கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தகவல் விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.