2011-15 கால கட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக அவரது நண்பர் கணேஷ்குமார் மத்திய குற்றப்பிரிவில் புகார் கூறியிருந்தார். அதனடிப்படையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். கரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீட்டில் சென்னை போலீஸ் விசாரணை நடத்தினர். செந்தில் பாலாஜி வீட்டில் இல்லாததால் அவரின் தந்தை வேலுச்சாமி, தாய் பழனியம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். திருவண்ணாமலையிலும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. அவருடைய தம்பி அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தற்பொழுது சென்னை மந்தைவெளியில் இருக்க கூடிய செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீட்டில் சோதனை நடத்த போலீசார் சென்றபொழுது அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டில் செந்தில்பாலாஜி இல்லாத நிலையில் வீட்டிற்குள்ளே வேறு யாரும் நுழையக்கூடாது என்பதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வீட்டிற்கு சீல் வைத்தனர். வீட்டில் சோதனை நடத்துவதற்காக நீதிமன்ற ஆணையை பெறுவதற்கான நடைவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.