தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்க திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கல்லுக்குழியில் நடந்தது. மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் பா. தர்மலிங்கம் வரவேற்றார். பொருளாளர் முருகேசன், அவைத்தலைவர் தர்மலிங்கம், துணைத்தலைவர்கள் கோபி ,குஞ்சுவேல், ஸ்டாலின், சுரேஷ், பொன்னுசாமி, மாவட்ட பிரதிநிதி மகாலிங்கம் துணைச் செயலாளர்கள் மதியழகன், ராமமூர்த்தி,ஆர் கே ரங்கராஜ், அசோக், பாண்டியராஜ், இளைஞர் அணி சுப்பிரமணியன், சரவணகுமார், முருகேசன், செந்தில் குமார், கோபிநாத், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாநில தலைமை சார்பாக, எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்று மருத்துவர் சமூகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தனியாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும். கல்வி வேலை வாய்ப்பு போன்றவற்றில் தனி உள் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். கோவிலில் மொட்டை அடிக்கும் காணிக்கை முடியை மருத்துவ சமூகத்திற்கு வழங்க வேண்டும் அல்லது லாபத்தை கணக்கில் கொண்டு ஒரு குறிப்பிட்ட சதவீதம் மொட்டை அடிக்கும் தொழிலாளிக்கு வழங்க வேண்டும். மருத்துவர் சமூகத்திற்கு சட்டசபையில் மேல் சபையை கொண்டு நியமன பதவி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 24-ந் தேதி சென்னையில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேலும் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் அடைக்கப்படுகிறது. அதன்படி திருச்சியில் உள்ள அனைத்து சலூன் கடைகளையும் 24ஆம் தேதி அடைத்துவிட்டு மேற்கண்ட அறவழி போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.