திருவண்ணாமலை மாவட்டத்தில், பா.ம.க சார்பில் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு இன்று (21-12-24) நடைபெற்றது. உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “விவசாயிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டிருக்கும் ஒரே கட்சி பா.ம.க. திமுக அரசு, 37 சதவீதம் இருக்கின்ற முதலாளிகளின் பக்கம் உள்ளது. ஆனால், மீதமுள்ள 63 சதவீதம் இருக்கின்ற உழவர்களின் பக்கம் பா.ம.க உள்ளது. பா.ம.கவின் போராட்டங்களால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
நந்தன் கால்வாய்த் திட்டம் அமைக்க 45 ஆண்டுகளாக மக்கள் கோரி வருகிறார்கள். விளைநிலங்களை அழித்து அறிவுசார் நகரம் அமைக்க வேண்டுமா? பரந்தூரில் விமான நிலையம் வரக்கூடாது; திருப்போரூரில் தான் அமைய வேண்டும். கொடுங்கோல் ஆட்சி கூட விவசாயிகளை சிறைப்பிடித்து குண்டர் சட்டம் போடவில்லை. ஆனால், விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைத்தது திமுக அரசு தான். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் வியாபாரியாகவே இருக்கிறார்.
விளைபொருள் கொள்முதல் ஆணையத்தை உருவாக்க வேண்டும். அனைத்து விளைப் பொருட்களுக்கும் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த கூட்டம் ஒரு சாம்பிள் தான். தமிழ்நாட்டை பாதுகாக்க பா.ம.கவுக்கு அதிகாரம் முக்கியம். அதனால், விவசாயிகளின் ஆதரவு எங்களுக்கு வேண்டும்” என்று பேசினார்.