திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று (20.12.2024) காலை கீழநத்தம் என்ற பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கொடூரமான முறையில் முகம் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக வெட்டி படுகொலை செய்துவிட்டு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த வழக்கில் தேடப்படும் மொத்த குற்றவாளிகளில் ஆறு பேரில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மீதம் ஒரு நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று (21-12-24) நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் கூடுதல் வழக்கறிஞர்கள் ஆஜராகி, இந்த கொலை சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதாவது, இந்த சம்பவத்தின் போது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான வீடியோ காட்சிகளை காட்டி, தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அரசின் கூடுதல் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
வீடியோ காட்சிகளை பார்த்த நீதிபதிகள், ‘ஒரே ஒரு சிறப்பு ஆய்வாளர் மட்டும் கொலை செய்த நபரை பிடிக்க நடவடிக்கை ஈடுபட்டுள்ளார். மற்ற போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர்? அந்த சம்பவத்தின் போது 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்திருக்கின்றனர். எதற்காக இந்த கொலை சம்பவம் நடந்தது என்பதை விட, சம்பவம் நடந்த இடம் தான் கவலையளிக்கிறது. நீதிமன்ற வளாகத்திலேயே இது போன்ற சம்பவம் நடந்தால் சாட்சியங்கள் எப்படி சாட்சி சொல்ல வருவார்கள்?. இது போன்ற சம்பவங்கள் வேறு எங்கு நடந்தாலும் கவலை ஏற்படாது. ஆனால், நீதிமன்றத்திலே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. பணியில் இருக்கும் காவல்துறையினர் பணியை விட, தங்களது செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர் என்று தங்களது வேதனையை தெரிவித்து கொலை சம்பவத்தின் போது, பணியில் தவறிழைத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.