திருவண்ணாமலை மாவட்டத்தில், பா.ம.க சார்பில் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு இன்று (21-12-24) நடைபெற்றது. உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், அன்புமணி ராமதாஸ் பேசியதை தொடர்ந்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர், “நான் அடிப்படையில் ஒரு விவசாயி. திராவிட மாடல் விவசாயிகளுக்கு எதிரானது. விவசாயிகளைப் படுகுழியில் தள்ளியது திராவிட மாடல் அரசு. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. வேளாண் கல்வியை ஊக்குவிக்கப்பட்டு, விளைபொருட்களுக்கு அரசே கொள்முதல் செய்து உரிய விலையை கொடுக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டும்.
வேளாண்மைக்கு முன்னுதாரணமாக இஸ்ரேல் இருக்கிறது. தண்ணீரே இல்லாத இஸ்ரேல் விவசாயத்தில் சாதித்து கொண்டிருக்கிறது. 12 ஆண்டுகளில் 8 கோடி மரங்களை இஸ்ரேல் நட்டிருக்கிறது. அந்த இஸ்ரேல் மாடல், தமிழகத்திற்கு வேண்டும். வறட்சியாலும் வெள்ளத்தாலும் தொடர்ந்து தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் அதிகம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. இஸ்ரேலை தமிழ்நாடு பின்பற்ற தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், இஸ்ரேல் மாடல் விவசாயம் வேண்டும், வேளாண்மைக்கு முன்னுதாரணம் இஸ்ரேல் தான்.
பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் போராட்டமே அவர்களின் உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராக சரண் சிங் இருக்கிறார். பல்வேறு பதவிகளை வகித்த போதும், சரண் சிங் விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தார். விவசாயிகள் தான் சரண் சிங்கின் பலம். சரண் சிங் எதைச் சொன்னாலும், அதை விவசாயிகள் கேட்டார்கள். என்னைப் போல அதிகாரத்திலும் இல்லாத போதும், சரண் சிங் விவசாயிகளுக்காக போராடினார். ராஜஸ்தானில் தாகம் தீர்த்தவர் ராஜேந்திர சிங். அவர் வரண்ட, ராஜஸ்தானின் நீர் வளத்தைப் பெருக்கினார். ஆனால், தமிழகத்தில் ஏற்படும் வறட்சி செயற்கையாக ஏற்படுத்தப்படும் ஒன்றாகும். தண்ணீர் மேலாண்மை கீழே தமிழ்நாடு இருப்பது என்பது கவலையளிக்கிறது. ஆற்று மணல் கடத்தலை தமிழக அரசு தடுக்க வேண்டும். மணல் வியாபாரத்தை அரசு தடுக்காவிட்டால், தமிழ்நாட்டின் ஆறுகள் மரணிக்கும்” எனப் பேசினார்.