ராஜஸ்தான் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 55வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், செறிவூட்டப்பட்ட அரிசி, பழைய கார் விற்பனை வரி உயர்வு உள்ளிட்ட பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கூடிய பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் கேரமல் பாப்கார்னுக்கு 18% வரி விதிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அரசு திட்டங்கள் மூலம் இலவசமாக தரப்படும் உணவுகளின் மூலப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. மிளகு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவற்றை விவசாயிகள் விற்பனை செய்தால் ஜிஎஸ்டி கிடையாது. செறிவூட்டப்பட்ட அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.
மருத்துவக் காப்பீடு தொடர்பாக விவாதிக்க அமைக்கப்பட்ட குழுவுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனால், மருத்துவக் காப்பீடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. விமானங்களுக்கான எரிபொருள் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் வரவில்லை. விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரும் பரிந்துரையை மாநிலங்கள் நிராகரித்துள்ளன. விமான எரிபொருள் ஏடிஎஃப்(ATF) மீது மாநிலங்கள் தொடர்ந்து வாட் வரி விதிக்கும்.
சிறு நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி துறையில் பதிவு செய்யும் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஃபுட் ஹோம் டெலிவரி சேவை மீது ஜிஎஸ்டி விதிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை. பாப்கார்ன் மீதான வரி தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இனிப்பு சேர்த்த பாப்கார்ன் மீது இனிப்பு பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். கட்டடங்களுக்கான எஃப்எஸ்ஐ (FSI) மீது வரி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.