உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதி குறித்து நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
ஒரு பெண் என்னிடம் கவுன்சிலிங் பெற வந்தார். அந்த பெண் பேசும்போது, வாழ்க்கை பற்றிய புரிதல், நகைச்சுவை என நன்றாகப் பேசினார். அதைப் பார்த்த எனக்கு அப்படி என்ன பெரிய பிரச்சனை அந்த பெண்ணுக்கு இருந்து விடப்போகிறது? எனத் தோன்றியது. அதை அப்படியே அப்பெண்ணிடம் கேட்டபோது, சாதாரணமாக சிரித்தபடி தனக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது என்றார். அதோடு தான் அதிகபட்சம் மூன்று மாதங்கள் தான் உயிருடன் இருப்பேன் என்று சொல்லிவிட்டு தன்னை பற்றிய பார்வை இப்போது உங்களுக்கு வந்திருக்கணுமே? என சாதாரணாக சிரித்தபடி கேட்டார். நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை என்றேன். அதற்கு அந்த பெண் பொதுவாகவே இந்த சமூகம் இந்த நோய் வந்தால் தவறாகத்தான் நினைக்கிறது என்றார். அதன் பின்பு பொறுமையாக தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி அந்த பெண் பேச ஆரம்பித்தார். அவர் பேசும்போது, கல்லூரியில் தனக்கு நிறைய நண்பர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அவர்களை பொருட்படுத்தாமல் பெற்றோர்கள் ஒரு பையனைத் திருமணம் செய்ய சொன்னார்கள். திருமணத்திற்குப் பிறகு நிறைய பெண்களிடம் கணவர் உடலுறவு செய்திருந்தது தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் அவர் திருமணத்திற்கு முன்பு இருந்தே பை செக்ஸுவல் உறவும் செய்து வந்திருக்கிறார். அதன் பிறகு அவருக்கு உடல்நிலை மோசமானது. இறுதியாக மருத்துவ பரிசோதனையின்போது அவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது. நோய் இருந்தது தெரிந்த பிறகும் அவர் மற்றவர்களிடம் உடலுறவு செய்வதை நிறுத்தாமல் இருந்தார்.
இதற்கிடையில் தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததையும் நல்வாய்ப்பாக அந்த குழந்தைக்கு இந்த நோய்த் தொற்று இல்லாததையும் கூறினார். கணவர் நோய்வாய்ப்பட்டு கவலைக்கிடமாக இருந்த சமயத்தில் தனக்கும் எய்ட்ஸ் தொடர்பான அறிகுறிகள் வந்தததை கூறினார். பரிசோதித்துப் பார்க்கையில் நோய் இருப்பது உறுதியானது தெரிந்தது என்றார். பின்பு தன் கணவரின் சொத்துகளை மாமனார் வீட்டார் தன்னுடைய பேருக்கு மாற்றியதாகவும் அதை தனக்குத் தெரிந்த தொண்டு நிறுவனத்திடம் பணமாக மாற்றிக் கொடுத்ததாகவும் கூறினார். மீதமுள்ள பணத்தை வைத்து, வாழும் இந்த குறுகிய நாட்களில் நிம்மதியாக இருக்கிறேன் என்றும் குழந்தையை தனது அப்பா, அம்மாவிடம் வளர்க்க ஒப்படைத்துவிட்டதாகவும் குழந்தைக்கான கல்லூரி படிப்புக்கான பணத்தையும் கொடுத்துவிட்டேன் என்றார்.
அதன் பின்பு நான், எதற்காக கவுன்சிலிங் வந்தீர்கள் என்றேன். அதற்கு அந்த பெண் எந்தவித ஆலோசனையும் வேண்டாம். அதையெல்லாம் தாண்டி வந்துவிட்டேன். என்னிடம் இருக்கும் வலிகளை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது அதனால்தான் கவுன்சிலிங் வந்தேன் என்றார். அந்த பெண் பேசியதில், தன் கணவர் இறந்துவிடுவார் அவரைப் பார்க்கப் போகலாமா? என்று சொல்லி, தன்னைப்போல் அவரால் எத்தனை பெண்கள் பாதிப்பில் இருக்கிறார்களோ? என தனக்குதானே கேள்விகேட்டு எதற்காக அவரை பார்க்க வேண்டும்? என்ற உணர்வில் இருந்தார். மேலும் அந்த பெண் பேசியதில், சாலையில் ஒரு கணவர், மனைவி சண்டையிட்டுக்கொண்டால் அவர்களைப் பார்த்து உங்களுக்கு எல்லாம் என்ன டா பிரச்சனை இருக்கிறது? என்றும் பல மைதானத்தில் விளையாடியவர்களை நம்மளுடைய மைதானத்திற்கு விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும் சொல்லக்கூடிய வெறுமையான நகைச்சுவை இருந்தது. இது எனக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இப்போது அந்த பெண்ணும் அவரின் கணவரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. அந்த பெண்ணின் பெற்றோர்கள் நல்லதுதானே செய்தோம்? இப்படி ஆகிவிட்டதே என்று சமாதானம் பேசிக்கொள்ள பேசலாம். ஆனால் அவர்களுக்கும் வலி, கஷ்டம் எல்லாம் இருக்கத்தான் செய்யும். இப்போது இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பெண்ணுக்கு நல்ல சம்பாத்தியத்துடன் ஒரு பையன் தெரிந்தால் உடனே தங்களின் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் அந்த பையனிடம் இருக்கும் தவறான செயல்கள் திருமணம் ஆனால் சரி ஆகிவிடும் என்கின்றனர். திருமணமானால் சரி ஆகிவிடும் என்ற நினைப்பதற்கு பதிலாக, சரி ஆன பிறகு திருமணம் செய்து வைக்க முடிவெடுங்கள்.
பெண்கள் தங்கள் காதலிப்பவர்களிடம் இருக்கும் தவறுகளைத் எப்படி தெரிந்து கொள்ள முடிகிறது? ஏனென்றால் அவர்களுக்கு அந்த பையனைப் பற்றி நன்றாகத் தெரியும். இதை வாசிக்கும் பெற்றோர்களிடம் நீங்கள் பார்க்கும் அனைத்து மாப்பிள்ளையும் 100% சரியாகத்தான் இருக்கிறார்களா? என்ற கேள்வியை முன் வைக்கிறேன். முடிந்தளவிற்கு திருமணம் செய்யும் முன்னர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்ல விஷயம். அதில் எமோஷனலாக குழப்பமடையாமல் மெடிக்கல் சர்டிபிகேட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். திருமணத்தின்போது சித்தப்பா, பெரியப்பா என யார் யாரோ மணமகன் அல்லது மணப்பெண் குறித்து நற்சான்றிதழ் கொடுப்பதற்குப் பதில், ஒரு மருத்துவரிடம் நற்சான்றிதழ் பெறுவது மிகவும் நல்லது என்றார்.