நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்ட நிலையில், அதிமுக - திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தர்மபுரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்பொழுது எவ்வளவு பிரச்சனை இருந்தது என்பதை நாடே அறியும். இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் ஏளனமாக, கீழ்த்தரமாக என்னை எப்படியெல்லாம் விமர்சனம் செய்தார்கள்.
எடப்பாடி பழனிசாமி தமிழகத்தினுடைய முதலமைச்சராக எத்தனை நாட்கள் இருக்கப் போகிறார். பத்து நாளா... ஒரு மாதமா... இரண்டு மாதமா... ஆறு மாதமா... என்று அவர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உங்களுடைய மகத்தான ஆதரவின் பேரில், மேடையில் இருக்கின்ற எங்களுடைய முன்னாள் அமைச்சர்களின் ஆதரவோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு நான்கு வருடம் இரண்டு மாதம் சிறப்பான ஆட்சியை நாட்டிற்கு தந்த அரசு அதிமுக அரசு.
இன்றைக்கும் தமிழகத்தில் எங்கு சென்றாலும் அந்த நாலு வருடம் இரண்டு மாத கால ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்று சொல்கின்ற அளவுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை நாங்கள் கொடுத்தோம். இன்று விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு எங்களிடம் ரகசியம் இருக்கிறது என்று சொன்னார். அந்த ரகசியத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. அதற்குப் பிறகு ஒரு கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு பல லட்சம் கையெழுத்துக்களை மக்களிடம் பெற்று அதையாவது உருப்படியாக சேர்த்தாரா என்றால் அதுவும் இல்லை. அண்மையில் திமுக இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் அந்த அரங்கிலே நீட் தேர்வு ரத்து செய்வதற்காக பல தரப்பிடம் இருந்து வாங்கப்பட்ட கையெழுத்து எல்லாம் சிதறிக் கிடந்தது. காலில் மிதிப்பட்டு குப்பையாக கிடந்த காட்சியை நாம் பார்த்தோம். இதுதான் நீட் தேர்வு ரத்து செய்கின்ற ரகசியமா?'' என்றார்.