விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் முழுவதும் பணி முடிவடையாத நிலையில் கடலூர் அருகே உள்ள பூண்டியாங்குப்பம் கிராமத்திலிருந்து சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு சுங்க வரி வசூலிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இது மிகவும் அதிகமாக உள்ளதாலும், உள்ளூர் மக்களுக்கு எந்த சலுகையும் வழங்காததால் பல்வேறு தரப்பு மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பு.முட்லூரில் சி.பி.எம், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், பேருந்து உரிமையாளர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், வேன் உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம், பரங்கிப்பேட்டை வர்த்தகர்கள் சங்கம், முட்லூர் மற்றும் பெரியபட்டு வர்த்தகர்கள் சங்கம், முட்லூர் ஜமாத்தார்கள், சிலம்பிமங்களம் மற்றும் தீர்த்தாம்பாளையம் கிராம முக்கியஸ்தர்கள், 6 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொத்தட்டை டோல் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், 60 கி.மீ ஒரு டோல்கேட் என்பதை உறுதி செய்ய வேண்டும். முழுமையாக விழுப்புரம் முதல் நாகை வரை பணிகள் முடிந்தவுடன் வசூல் துவக்கப்பட வேண்டும் 20 கி.மீ பக்கம் உள்ளவர்களுக்கு மாதம் 340 என்பதை ரத்து செய்ய வேண்டும், அதே நேரத்தில் 50 கி.மீ உள்ளவர்களுக்கு மாதம் 340 பாஸ் என்பதை விஸ்தரிக்க வேண்டும்.
தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு விதித்துள்ள அநியாய கட்டணத்தைக் குறைத்திட வேண்டும். திர்த்தாம்பாளையம் மற்றும் சிலம்பிமங்களம் கிராம மக்களுக்கு உரியப் பாதை வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். டோல் வசூலுக்கு அவசரப்படும் NHAI நிர்வாகம், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வழங்காத தொகையை உடன் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொத்தட்டை டோல்கேட் முற்றுகை போராட்டத்தை அனைத்து கட்சிகள், அனைத்து சங்கங்கள் மற்றும் அனைத்து கிராம மக்களும் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.