சேலம் அருகே, ஏரியில் நீச்சல் பழகச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பச்சமுத்து. இவருடைய மகன் சஞ்சய் (11). அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் நவீன் (16). இவர்களில் சஞ்சய், ஆறாம் வகுப்பும், நவீன் எட்டாம் வகுப்பும் படித்து வந்தனர். இருவரும் நண்பர்கள். கரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்து வந்த அவர்கள், வியாழக்கிழமை (மே 14) காலையில் பெரியாம்பட்டியில் உள்ள ஏரியில் மேலும் மூன்று நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். அங்கே மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த சிறுவர்கள், ஏரியில் இறங்கி குளித்தனர்.
அவர்களில் சஞ்சய், நவீன் ஆகிய இருவருக்கும் நீச்சல் தெரியாது என்று சொல்லப்படுகிறது. ஆர்வ மிகுதியில் ஏரியின் நடுப்பகுதிக்குச் சென்றுவிட்ட அவர்கள் அங்கிருந்து மீண்டும் கரைப்பகுதிக்குத் திரும்ப முடியாமல் நீரில் தத்தளித்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற சிறுவர்கள், அந்தப்பகுதியில் சென்றவர்களுக்குத் தகவல் கொடுத்து ஏரிக்கு அழைத்து வந்தனர். ஆனால், அதற்குள் சிறுவர்கள் இருவரும் நீருக்குள் மூழ்கி இறந்துவிட்டனர்.
இதுகுறித்து தாரமங்கலம் காவல்நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. காவல்துறையினர் விரைந்து வந்து சிறுவர்களின் சடலங்களை மீட்டனர். சடலங்களை, உடற்கூறாய்வுக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிணறு, கல் குவாரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் சிறுவர்கள் குளிக்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். ஏரியில் மூழ்கி சிறுவர்கள் பலியான சம்பவம் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.