Skip to main content

"குழந்தைக்களுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் - 2009"

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சுமார் 25% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமே கட்டாய கல்வி உரிமை சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை இச்சட்டத்தின் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கலாம். இச்சட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புவோர்கள் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம். ஒவ்வொரு பள்ளிகளிலும் 25% ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை என்பது கட்டாயமானது. இதற்கான கட்டணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.
 

rte education

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் மூலம் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பெற ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதனால் அனைத்து தனியார் பள்ளிகளும் கட்டாயம் 25% இட ஒதுக்கீடு கொடுப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த விண்ணப்பங்கள் இணைய தளத்தில்  ஏப்ரல் மாதம் இறுதியில்  தொடங்கி மே மாதம் இறுதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள முகவரி : www.dge.tn.gov.in  , tnmatricschools.com ஆகும். இந்த இணைய தளத்திற்கு "USER NAME" மற்றும் "PASSWORD" தேவையில்லை. இந்த இணையதளத்தை பயன்படுத்தி குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் வீட்டிலிருந்தவாரே விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்திற்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும் இணைய தள வழியில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

rte education

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் உள்ள விதிமுறைகள் ! 

1.தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள். இந்த   விண்ணப்பத்தில் ஐந்து பள்ளிகளின் பெயர்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். 

2. பெற்றோர்கள் விண்ணப்பித்த பள்ளிகளின் எத்தனை இடங்கள் இந்த சட்டத்தின் கீழ் உள்ளது என்பது தொடர்பான விவரங்களை www.dge.tn.gov.in , tnmatricschools.com என்ற இணையதளத்தில் அறியலாம்.

3. பள்ளிகளை தேர்வு செய்வது எப்படி என்றால் குழந்தைகள் வசிக்கும் இல்லத்தில் இருந்து சுமார் 1 கிமீ முதல் 3 கிமீ வரை உள்ள பள்ளிகளின் பெயர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அந்த பள்ளிகளின் பெயரை மட்டுமே விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

4. மேலும் தங்கள் வசிக்கும் மாவட்டத்தை குறிப்பிட்டு , பகுதியை குறிப்பிட்டாலே பள்ளிகளின் பெயர்களை இணையதளத்தில் காணலாம் மற்றும் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளின் பெயர்களை டைப் செய்ய வேண்டியதில்லை.

5. டிரஸ்டின் கீழ் இயங்கும் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர்கள் , தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள் இச்சட்டத்திற்க்குள் வராது மற்றும் விண்ணப்பிக்க முடியாது. "உதாரணமாக" : சேலம் மாவட்டத்தில் உள்ள "Holy Cross Matriculation School , Cluny Matriculation School, Montfort School , Notre Dame school" இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

6.மேலும் தங்கள் குழந்தைகளை இச்சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்க விரும்புவோர்கள் தொடக்க வகுப்பு LKG வகுப்பில் இருந்தே சேர்க்க முடியும் மற்றும் இடையில் பள்ளிகளை மாற்றம் செய்ய முடியாது. LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை அதே பள்ளியேலே படிக்க வேண்டும். அனைத்து கட்டணமும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பள்ளிக்கு கட்டணத்தை வழங்கும். எனவே குழந்தையின் பெற்றோர்கள் எந்தவிதமான கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை.

7.விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்ட ஐந்து பள்ளிகளில் ஏதாவது ஒரு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்கலாம். பள்ளிகளில் குறிப்பிட்ட 25% ஒதுக்கீட்டிற்கு மேல் விண்ணப்பங்கள் வரும் பொழுது சமந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் RTE யின் மூலம் விண்ணப்பித்த பெற்றோர்களை தொலைபேசி மூலம் பள்ளிக்கு அழைத்து "குலுக்கல் "முறையில் விண்ணப்பத்தை தேர்ந்தெடுத்து குழந்தைகளை பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.

8.பெற்றோர்கள் தங்கள் தொலைபேசி எண்கள் மற்றும் இமெயில் முகவரியை கட்டாயம் குறிப்பிட வேண்டும். அப்போது தான் பெற்றோர்கள் குறிப்பிட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் RTE யின் சேர்க்கை தொடர்பான தகவல்களை குழந்தையின் பெற்றோர்களுக்கு வழங்குவர்.
 

rte education

"கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்"

1.குழந்தையின் புகைப்படம்.
2.பெற்றோர்களின் ஆதார் அட்டை.
3. பெற்றோர் அல்லது குழந்தையின் நிரந்தர முகவரி தொடர்பான அடையாள அட்டை . (ஓட்டுநர் உரிமம் , வங்கி கணக்கு புத்தகம் , ஆதார் அடையாள அட்டை , வாக்காளர் அடையாள அட்டை , குடும்ப அட்டை , மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை , கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று உள்ளிட்டவை முகவரி சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்)
4.குழந்தையின் ஆதார் அட்டை.
5. குழந்தையின் சாதி சான்றிதழ்
6.தந்தையின் வருமான சான்றிதழ்.
7.குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.

இவை அனைத்தும் " அசல் "சான்றிதழாக இருக்க வேண்டும். பின்பு "SCAN" செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். "நகல்" சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் பதிவேற்றம் செய்ய விரும்பினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

குறிப்பு : இச்சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் (SC/ST) வகுப்பை சார்ந்தவர்களுக்கு "சாதி சான்றிதழ்" முக்கியமாகும். பெற்றோரின் வருமான சான்றிதழ் தேவையில்லை.

யார் யாரெல்லாம் இச்சட்டத்தின் கீழ்  விண்ணப்பிக்க முடியும் !


1. நலிவடைந்த பிரிவினர் (வருமான சான்றிதழ் தேவை)
2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் (சாதி சான்றிதழ் தேவை)
3.வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் (ஆதரவற்றவர் , எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர் , மூன்றாம் பாலித்தனவர் , மாற்று திறனாளிகள் , துப்புறவு பணியாளர்கள் எனில் அதற்கான சான்று) இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை பள்ளியில் சேர்த்த பின்பு கல்வி கட்டணத்தை கேட்கும் பள்ளிகள் மீது தமிழக பள்ளிக்கல்வி துறை , தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் , மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரிடம் சமந்தப்பட்ட பெற்றோர்கள் புகார் அளிக்கலாம்.

தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள மக்களுக்கு "கட்டாய கல்வி மற்றும் இலவச கல்வி சட்டம் " இருப்பது என்பது தெரியாது. எனவே தன்னார்வலர்கள் , சமூக ஆர்வலர்கள் , இளைஞர்கள் , மாணவர்கள் என அனைவரும் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் . அப்போது தான் அனைத்து குழந்தைகளும் கல்வியறிவை அடைய முடியும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.


 பி . சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்