Skip to main content

ஜெகபர் அலி கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்!

Published on 22/01/2025 | Edited on 22/01/2025
Pudukottai Jagabar Ali case Change to CBCID investigation

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜெகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளம் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி ஜெகபர் அலி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஜகபர் அலி மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில், ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜெகபர் அலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரின் உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆர்.ஆர். நிறுவனங்களின் உரிமையாளர்களான ராசு அவரது மகன் சதீஷ், ராமையா, ராசுவின் டிப்பர் லாரி வைத்துள்ள நண்பர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் காசி ஆகிய 5 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவான ராமையாவை தவிர மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகைய சூழலில் தான் ஜெகபர் அலி கொலை வழக்கை விசாரித்து வந்த புதுக்கோட்டை போலீசார் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற கோரி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்