கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஈடுபட உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பார்வையிட்டார். பின்னர் கடந்த பாராளுமன்றத் தேர்தல் போல், உள்ளாட்சித் தேர்தலிலும், தங்களது சிறப்பான ஒத்துழைப்பை தருமாறு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலை சிறப்பான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 12,236 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. மேலும் நாளையுடன் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால், அதிக அளவில் வேட்புமனுக்கள் வரலாம் என்று நிலை உள்ளதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு உள்ளது.
தேர்தலுக்காக மாவட்டம் முழுவதும் 2888 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 569 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்வாக்குச்சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் ஆலோசனை செய்து கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பெட்டி, ரசீதுகள், வேட்பாளரின் மனுக்கள் என தேர்தலுக்கு உண்டான அனைத்து ஆவணங்கள் மற்றும் பொருட்களும், சிறப்பான முறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் தலைவர் பதவிக்கு ஏல முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டபோது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் அப்பகுதியில் போட்டியிடுவதால், ஏலமுறை சம்பவங்கள் நடைபெறவில்லை. சமூக வலைத்தளத்தில் ஏலம் விடப்பட்டதாக அவதூறு பரப்புபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். வேட்பாளர்கள் தனக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தி பணமாகவோ பொருளாகவோ கொடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்" என்று தெரிவித்தார்.