
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகன கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதாக புகார் வந்துள்ளது. இதனை இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார்களாகவும், கோரிக்கையாகவும் கொடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி உத்தரவின் பேரில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் மூன்று முனை சந்திப்பில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில் துறைப்பட்டு பகுதியில் இருந்து 16 வயது சிறுவன் ஒருவன் முகத்தில் மாஸ்க அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தான்.
சோதனையில் ஈடுபட்ட போலீசார் சிறுவனை மறித்து விசாரணை செய்தனர். ஆனால் விசாரணையில் சிறுவன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் சங்கராபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த சிறுவன் கச்சிராயபாளையம் அருகே உள்ள செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்று விசாரணையில், “சார் சிறிய வயதிலிருந்தே பைக் என்றால் எனக்கு உசுரு. சோறுகூட போட வேண்டாம் ரக ரகமாக கலர் கலராக பைக்குகள் ஓட்டினால் போதும். சிறிய வயதில் இருந்து பிடித்த பைக்களை ஓட்ட வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. காலையில் வீட்டை விட்டு கிளம்பி அதிக பைக்குகள் நிற்கும் இடத்திற்கு செல்வேன். உடனே அந்த பைக்கை லாக்கரை உடைத்து கொஞ்ச தூரம் எடுத்துச் சென்று ஒரு இடத்தில் விட்டுவிட்டு அதே இடத்தில் நிற்கக்கூடிய மற்றொரு வாகனத்தை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுவேன்” என சிரித்துக்கொண்டே விசாரணையில் 16 வயது சிறுவன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனக்கு பிடித்த பைக்குக்களை சோழவண்டியபுரம் வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று மறைத்து வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சோழவண்டியபுரம் வனப்பகுதிக்கு சென்ற போலீசார் ரூ.3.லட்சம் மதிப்பிலான 8 விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்பிறகு 16 வயது சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். மேலும் சிறுவனுக்கு உடந்தையாக இருந்த குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.