
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல அரசுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்டாலின் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தி.மு.க. மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் கட்சிப் பணி, மக்கள் சேவை ஆற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார். தி.மு.க.வைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.