புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர்கள் போதைக்காக மதுக்கடைகளுக்கு செல்வதை விட மாற்று போதைக்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து போதைக்காக மாத்திரைகள், ஊசிகளை விற்பனை செய்வதும், கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் புதுக்கோட்டையில் ஒரு வீட்டில் சோதனை செய்த போது போதைக்காக பயன்படுத்தும் ஏராளமான ஊசி மருந்துகள், மாத்திரைகளை கைப்பற்றிய போலீசார், அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் விலை உயர்ந்த ஊசி மருந்துகளை முக்கிய புள்ளிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
நகரங்களை கடந்து கிராமங்களுக்குள்ளும் பள்ளி மாணவர்கள் வரை. இந்த மாற்றுப் போதை நோயாக பரவியுள்ளது. இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் போதைக்காக மாத்திரைகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து டிஎஸ்பி கோகிலா தலைமையில் தனிப்படை அமைத்து ரகசியமாக ஆய்வுகள் செய்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு அரசர்குளம் பகுதியில் ஜெகன்(35), ரியாஸ் (38) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்த போது, அவர்கள் மாற்றுப் போதைக்காக கிராமத்து இளைஞர்களை குறிவைத்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்வது அறிந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தங்களுக்கு வேறு சிலர் மாத்திரைகள் கொடுக்கிறார்கள் என்றும், அந்த நபர்களை பற்றியும் தகவல் கொடுத்துள்ளனர்.
இவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் நேற்று அதிகாலையில் திருப்பூர் பகுதியில் மறைந்திருந்த வாசு (40), பானுமதி (42), வினோத் (30), கெளதம்ராஜா (38) ஆகிய 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அறந்தாங்கி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். இவர்களிடமிருந்து 2500 போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ 3 லட்சத்தி 75 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.