திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள விஸ்வேஸ்வரசும்வாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களில் இன்று தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, கோயில்களில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டும் என இருக்கின்ற திருக்கோயில்கள், குடமுழுக்குக்காக எடுத்துக் கொண்ட பணி தொய்வடைந்து உள்ள கோயில்கள், அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு, குடமுழுக்கு பணிகளை விரைவுபடுத்த வகையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், திருக்கோயில் நிலங்களில் முறையாக வாடகை செலுத்தாமல் இருக்கின்ற நிலையையும் அதேபோல் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும் கண்டறிந்து அது குறித்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எழை மக்களைவிட வசதியுள்ளவர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்பை முதலில் கைப்பற்ற தீவிர நடவடிகை எடுகப்பட்டுவருகிறது. தமிழகத்தில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய கோயில்களை கண்டறிந்து பணிகளை செய்து முடிக்க முதல்வர் உத்தரவரிட்டுள்ளார். இதற்காக முதல்கட்டமாக ஆளுநர் உரையிலேயே ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியானது ஆன்மிக மக்களுக்கு, பொற்கால ஆட்சியாக இருக்கும் வகையிலேயே இந்து சமய அறநிலையத்துறையில் செயல்பாடுகள் இருக்கும். சிறிய கோயில்கள் முதல் அனைத்து கோயில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் படிப்படியாக நடந்துவருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அவை 100 நாட்களில் முழுமையாக செயல்படுத்தப்படும்” என்றார்.