சென்னை அமைந்தகரையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''தமிழ் காக்க உயிரையும் விலையாய் கொடுத்த வீர மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள் இந்த நாள். தமிழ்நாடு இதுவரையில் எத்தனையோ மொழிப்போர் களங்களை சந்தித்திருக்கிறது. எத்தனையோ மறவர்களை மொழிப்போர் களத்தில் இழந்திருக்கிறது. மொழி போர்க்களத்தில் அரசியல் தலைவர்கள் மட்டும் நிற்கவில்லை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரோடு தமிழ் அறிஞர்களும் சமயத் துறவிகளும் நின்றார்கள்.
உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுகின்ற அத்தனை பேரும் நின்றார்கள். ஆண்களும், பெண்களும் சரிசமமாக நின்றார்கள். பெண்கள் தனியாக வந்தார்களா... இல்லை. கை குழந்தைகளைக் கூட அழைத்துக் கொண்டு வந்தார்கள். உலகத்தில் எந்த மொழிக்காகவும் இப்படி ஒரு போராட்டம் நடந்திருக்காது. அப்படி ஒரு போராட்டம் தான் நமது மொழிப் போராட்டம். 'தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா' என்ற இறுமாப்போடு நான் நிற்கிறேன். தமிழுக்காகவே உயிர் நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள். 1938 ஆம் ஆண்டு மொழி போராட்டத்தில் கைதாகி 1939 ஆம் ஆண்டு மறைந்த நடராஜனும், தாளமுத்துவும், 1965 ஆம் ஆண்டு தூக்கி நின்று துப்பாக்கிக் குண்டுக்கு மார்பு காட்டி நின்ற அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் படையின் சிவகங்கை ராஜேந்திரனும், 1965 மற்றும் 66 ஆம் ஆண்டுகளில் தன்னுடைய தேக்குமர தேகத்தை தீயால் எரித்துக்கொண்ட கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மாணவர் மணி, மயிலாடுதுறை சாரங்கபாணி போன்றவர்களும், அமுது அருந்துவது போல் நஞ்சு அருந்தி உயிரிழந்த கோவை பீளமேடு தண்டபாணி, கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம் போன்றவரும் இன்றைக்கு படங்களாக நின்று உணர்வுகளை நிறைந்து நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தியாகிகள் அனைவருக்கும் என்னுடைய வீரவணக்கத்தை செலுத்துகிறேன். இவர்கள்தான் தமிழ்த்தாயின் புதல்வர்கள். தமிழ்த்தாயின் பாலருந்தி மலர்ந்த பிள்ளைகள். தன்னுடைய உயிரை அர்ப்பணித்து தமிழ்த்தாயை காத்தவர்கள். இந்த போராட்டத்திற்குப் பிறகு 1967 தேர்தலில்தான் திமுக முதன்முதலாக ஆட்சி அமைத்தது. யாரால் ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்தவர்கள் அல்ல. தமிழ் காக்கும் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கமான திமுகவின் ஆட்சி அமைந்த பிறகு தான் தமிழ்நாட்டில் தமிழாட்சி தொடங்கியது. அது தமிழர் ஆட்சியாக தொடர்கிறது'' என்றார்.