Skip to main content

ஆட்சியர் அலுவலகம் முன்பு கர்ப்பிணிப் பெண் 12 மணி நேரம் போராட்டம்...

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

Pregnant woman waited 12 hours in front of the Collector's Office ...

 

 

பெரம்பலூர் மாவட்டம் இரூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சவீதா. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சத்துணவு அமைப்பாளர் பணி கிடைத்துள்ளது. அதன்படி இவர் ஆலத்தூர் ஒன்றியம் சிறுகன்பூர் என்ற கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அமைப்பாளராக பணியில் சேர்ந்துள்ளார். அப்போதுமுதல் அந்தப் பள்ளிக்கு தினசரி சென்று தனது பணியை செய்து  வந்துள்ளார். 

 

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான இரூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளர் பணியிடம் காலியாக இருந்ததால் அந்தப் பள்ளியின் பொறுப்பும் கூடுதலாக சவிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனையும் ஏற்று பணியை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது சவீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். எனவே தன்னால் சிறுகன்பூர் பள்ளிக்கு சென்று வருவது சிரமமாக உள்ளது. அதனால் தற்போது கூடுதல் பொறுப்பாக பணி செய்துவரும் இரூர் பள்ளியிலேயே தனக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். 

 

அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஆட்சியரின் சத்துணவு நேர்முக உதவியாளர் உட்பட பல அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பலமுறை நேரில் வந்தும் பணிமாறுதல் கேட்டுள்ளார். இவரை பலமுறை அதிகாரிகள் அலைக்கழிக்க வைத்துள்ளனர்.  ஆனால், பணி மாறுதல் உத்தரவு மட்டும் வழங்கவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்குமுன்பு மனம் நொந்த சவீதா, மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியுள்ளார். 

 

அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரனை வந்து சந்திக்குமாறு கூறி அனுப்பி உள்ளனர். அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரனை சந்திப்பதற்காக வந்து காத்திருந்தார். அங்கிருந்து அலுவலர்களிடம் தன்னை மாவட்ட வருவாய் அதிகாரி வந்து சந்திக்குமாறு அழைத்து இருந்தனர். அவரை நான் நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கொஞ்ச நேரம் பொறுத்து இருங்கள் அவரைப் பார்க்க அழைக்கிறோம் என்று அங்கிருந்த அலுவலர்கள் கூறியுள்ளனர். ஆனால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சவீதாவை சந்திக்க அழைக்காமல் அலுவலகத்தை பூட்டிவிட்டு அனைவரும் புறப்பட்டு சென்றுவிட்டனர். 

 

வேதனை அடைந்த கர்ப்பிணிப் பெண்ணான சவீதா, இரவு 10 மணி வரை  அதிகாரி அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இரவு நேரத்தில் அதிகாரி அலுவலக வாசலில் தனியாக அமர்ந்து தர்ணா போராட்டம் செய்யும் தகவல் பரவியது. இதையடுத்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சவீதாவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.  இதை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்களிடம் தனது நிலைமையை எடுத்துக் கூறி கதறி அழுதுள்ளார் சவீதா. விரைவில் பணி மாறுதல் வழங்குவதாக அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்