விழுப்புரம் மாவட்டம், பெருவளுர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சண்முகம் மகள் பிரதீபா, நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் கடந்த ஜீன் 4ந்தேதி தற்கொலை செய்துக்கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை தடை செய்ய வேண்டும்மென தமிழகத்தில் குரல்கள் அதிகரித்துள்ளன. தற்கொலை செய்துகொண்ட பிரதீபாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு சென்று அஞ்சலிக்காக வைத்தனர். அதிமுகவை தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தினர்.
அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து திண்டிவனம் கல்வி மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்களில் 10 ஆம் வகுப்பில் 490 மதிப்பெண் எடுத்து முதல் இடத்தை பிடித்தவர் பிரதீபா. அவர் இறந்த அன்று அவர் படித்த பள்ளி எப்படியிருக்கிறது என காணச்சென்றோம்.
பெருவளுர் கிராமத்திற்க்கு வெளியே பசுமை சூழ்ந்த பகுதியில் அமைதியாக இயங்கிக்கொண்டு இருந்தது பெருவளுர் அரசு மேல்நிலைப்பள்ளி. அந்த பள்ளியின் அலுவலகத்துக்கு சென்று பார்த்தபோது, பெரிய அளவில் எந்த அடிப்படை மற்றும் கல்விக்கு தேவையான வசதிகள் இல்லாமல் இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. அதைவிட அதிர்ச்சி, சாதனை செய்த அந்த மாணவியின் பெயர், சாதனை செய்தவர்களுக்கான பெயர் பலகையில் இருக்கிறதா எனத்தேடினால் பெயர் மட்டும்மல்ல, பெயர் எழுதுவற்கான பெயர் பலகையே அங்குயில்லை. இதுப்பற்றி அங்குள்ள முக்கிய ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, ரூம் மாற்றும்போது எங்கவச்சாங்கன்னு தெரியல என்றவர் பின்னர் அவரே பெயர் பலகையே எழுதல என்றார். பிரதீபாவின் மதிப்பெண்ணையே பிரண்ட்டவுட் தாளில் பார்த்து தான் கூறினார்.
பள்ளிகளில் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண் எடுத்தவர்களின் பெயர்களை அனைத்து மாணவர்களும் பார்க்கும் வகையில் சாதனை பலகை என ஒன்றை உருவாக்கி அதில், தேர்வு எழுதிய ஆண்டு, முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் எடுத்தவரின் பெயர், அவர்கள் எடுத்த மதிப்பெண் எழுதிவைப்பர். அதற்கு காரணம், அடுத்தடுத்த வருடங்களில் தேர்வு எழுதும் தங்களது பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கவே இப்படி செய்யப்படுகிறது.
கல்வி மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் முதலிடம் பிடித்த பிரதீபா, அதற்கடுத்த வருடங்களில் அதிக மதிப்பெண் எடுத்த பிள்ளைகளின் மதிப்பெண்ணை கூட அந்த பள்ளி அடுத்தடுத்து வரும் பிள்ளைகளுக்கு அறிவிக்காமல் உள்ளதை நினைத்து வேதனையாக இருந்தது.
தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளி மாவட்டத்தில் முதலிடம் பிடித்தது, மாநிலத்தில் இரண்டாம் பிடித்தது என செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தாலும் பள்ளிகளில் சாதனை பலகையில் பெயர் எழுதி வைத்து பெருமைப்படுத்துவர். அரசுப்பள்ளிகலும் அதனை செய்துவந்தது. தற்போது பெரும்பாலான அரசு பள்ளிகள் அதனை செய்ய மறந்துள்ளது வேதனையாக இருக்கிறது.