Skip to main content

கள்ளிக்குப்பம் ஏழை மக்களின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்! - சீமான் வேதனை

Published on 14/10/2018 | Edited on 14/10/2018

 

seeman

 

சென்னை - கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார இணைப்பு பெற்று வசித்துவரும் பொதுமக்களை மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி குடியிருப்புகளை தமிழக அரசு அகற்றியுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (13-10-2018) கள்ளிக்குப்பத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,

 

கள்ளிக்குப்பம் பகுதியில் மக்களின் வீடுகளை இடிப்பது ஒரு தவறான அணுகுமுறை. மக்களுக்கு மாற்றுக்குடியிருப்பைக் கட்டித் தருவோம் என்கிறார்கள். மாற்றுக்குடியிருப்பு என்பது கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கல்லுக்குட்டை போன்ற பகுதிகளில்தான் கட்டப்படுகிறது. அக்குடியிருப்புகள் எந்தளவில் இருக்கும் என்பது நாமறிந்ததுதான். கள்ளிக்குப்பம் பகுதியில் ஒவ்வொருவரும் 25 ஆண்டுகளாக இங்கு குடியிருக்கிறார்கள். அவர்கள் எவரும் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. பணம் கொடுத்தே நிலத்தை வாங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் நிலத்தை விற்றவர்களே ஆக்கிரமிப்பாளர்களாக இருக்க முடியும். அம்மக்களுக்கு மின் இணைப்பு, சாலை வசதி, எரிபொருள் இணைப்பு, கழிவுநீர் வெளியேற்றம், தெருவிளக்கு வசதி, குடிநீர் இணைப்பு, வாக்களர் அட்டை, குடும்ப அட்டை என எல்லாவற்றையும் அரசுதான் செய்து கொடுத்திருக்கிறது.

 

seeman

 

கடந்த மாதம்வரை அவர்களிடம் வரியினைப் பெற்றுக்கொண்ட அரசு, இம்மாதம் ஆக்கிரமிப்பெனக் கூறி வீடுகளை இடிப்பதை எவ்வாறு ஏற்க முடியும்? வாழ்வாதாரம் யாவும் கள்ளிக்குப்பம் பகுதியில் இருக்கிறபோது அவர்களைப் பெரும்பாக்கத்திற்குக் குடியேற்றினால் அவர்களது வாழ்வாதாரம் முழுவதுமாகப் பாதிக்கப்படாதா? அப்பகுதி மக்களின் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குள்ளப் பள்ளிகளில்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இடமாற்றம் செய்துவிட்டால் அக்குழந்தைகள் எவ்வாறு படிப்பைத் தொடர்வார்கள்? இப்பகுதிக்கு அருகில் காசாக்காடு என்கிற குடியிருப்பு இருக்கிறது. இதனை அமைச்சர் பெருமக்கள்தான் கட்டியிருக்கிறார்கள். இதேபோல, இப்பகுதிக்குள் கல்வி நிறுவனங்களும் இருக்கிறது. அவையாவும் இடிக்கப்படவில்லை என்பதன் மூலம் அவர்களின் தேவைக்காகத்தான் இவ்வீடுகள் இடிக்கப்படுகிறது என்பது தெரிகிறது. அம்மக்களுக்குச் சமைப்பதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எடுக்கக்கூட காலநேரம் அளிக்காது வீடுகளை இடித்திருக்கிறார்கள். அவ்வளவு அவசரம் அவசரமாக வீடுகளை இடிக்க வேண்டியத் தேவையென்ன? இதனைக் கேட்டால், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாதென்கிற உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, ஏரிகளைப் பாதுகாக்கிறோம் என்கிறார்கள். இவர்கள் பாதுகாக்கிற இலட்சணம் நமக்குத் தெரியாதா? சென்னையே ஏரிகளின் நகரம்தான்.

 

seeman

 

மிகப்பெரிய அரசு கட்டிடங்கள், அரசு அலுவலர் குடியிருப்புகள், நீதிமன்றங்கள், வள்ளுவர் கோட்டம் என அத்தனையும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துத்தான் கட்டப்பட்டிருக்கிறது. நீர்நிலைகளில் குடிசைகள் போடப்படுகிறபோதே மக்களிடம் தெரிவித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே? சொந்த நாட்டில் வீடுகளை இழந்து அகதியாக நிற்கிற நிலைக்கு அவர்களும் வந்திருக்க மாட்டார்களே? இன்றைக்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பேசுகிற இந்த நேர்மையாளர்கள் யாவும் நிலத்தை ஆக்கிரமிக்கிறபோது என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இருபெரும் திராவிடக் கட்சிகளும்தான் இந்நிலத்தை மாறி மாறி ஆண்டிருக்கிறது. அவர்கள் இருவரும்தானே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்? இவ்வளவு ஆண்டுகால ஆட்சியில் கழிவு நீர், வடிகால் நீர் வடிந்தோட அடிப்படைக் கட்டமைப்புகூட தலைநகர் சென்னையில் இல்லை. குறைந்தபட்சம், மக்களை மாற்று இடத்திற்குக் குடியமர்த்திவிட்டாவது இந்நிலத்தின் மீது கைவைத்திருக்கலாம். அதனைவிடுத்து வீடுகளை இடித்து நடுத்தெருவில் அம்மக்களை நிறுத்திவிட்டு குடியமர்த்துவோம் என்பது ஏற்புடையதல்ல!

 

seeman

 

ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான இந்நடவடிக்கைகள் யாவும் ஏழை, எளிய அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது மட்டும்தான் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கெதிராக என்ன செய்வதென்று தெரியாது நிற்கிறோம். மாற்று இடத்தையாவது நாங்கள் கேட்கிற இடத்தில் கொடுங்கள் எனப் பரிந்துரை செய்திருக்கிறோம். இன்றைக்கு எப்படி இம்மக்களின் வீடுகள் இடிந்து சரிந்து விழுகிறதோ அதேபோல ஒருநாள் இந்த அதிகாரமும் சரிந்து விழும். இவ்வாறு சீமான் கூறினார்.

சார்ந்த செய்திகள்