தமிழகத்திலுள்ள அனைத்து சிறைகளிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக, மத்திய சிறைகளுக்கு தலா ரூ.50000, மற்றும் மாவட்ட சிறை/பார்ஸ்டல் பள்ளிக்கு (புதுக்கோட்டை) ரூ.25000 என, தமிழ்நாடு சிறைப்பணியாளர்கள் நல நிதியிலிருந்து நிதி வழங்கிட சிறைத்துறை தலைவரும் கூடுதல் காவல்துறை இயக்குநருமான ஆபாஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அந்த ஆணையில் (எண் 00891/ஐ.சி.1/2020), மத்திய சிறை வளாகப் பணியாளர்கள் குடியிருப்பில் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் நடத்திட, இந்த நிதியிலிருந்து செலவு செய்யுமாறு சிறை கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
“சிறைப் பணியாளர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனே, பொங்கல் விழாவும், விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதாகச் சொல்கிறார், ஏடிஜிபி ஆபாஷ்குமார். ஆனால், அதற்கு நேர்மாறாகவே எல்லாம் நடக்கிறது..” எனப் புலம்பும் சிறைப் பணியாளர்கள், “மதுரை மத்திய சிறை வளாகப் பணியாளர்கள் குடியிருப்பில் சுமார் 70 வீடுகளுக்கும் மேல் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் யார் யார் தங்களின் வீட்டைச் சரியாகப் பராமரித்து வருகிறார்களோ, அவர்களுக்கே பரிசாம். சிறை அதிகாரிகள் வீடுகளைப் பார்வையிட வருவார்களாம். இப்படிச் சொல்லியே, கடந்த 15 நாட்களுக்கும் மேலாக எங்களை வேலை வாங்கி வருகிறார்கள்.
அதனால், வீட்டுக்கு வெள்ளையடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையிலேயே, ஒரு சிறைப்பணியாளர் ரூ.7000 வரை செலவழிக்க வேண்டியதாகிவிட்டது. இந்த வீடுகளைப் பழுது பார்ப்பதற்கு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து நிதி பெறும் வழியிருக்கிறது. இந்த அதிகாரிகளோ, அதற்கான நடவடிக்கையில் இறங்காமல், எங்கள் சொந்தப் பணத்திலிருந்து வீடுகளைப் பழுது பார்க்க வைத்துவிட்டார்கள். அதனால், மன அழுத்தத்திலிருந்து விடுபடச் செய்யவேண்டும் என்ற நோக்கமே சிதைந்து, கூடுதலாக எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது” என்று நொந்துபோய்ச் சொல்கிறார்கள். மதுரை மத்திய சிறையில் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள அனைத்து சிறைகளிலுமே சிறை பணியாளர்கள், இதே ரீதியில்தான் தங்களின் குமுறலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.