Skip to main content

புதர் மண்டிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சீல்... கடமை உணர்ச்சியில் அதிகாரிகள்...!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021
office sealed

 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கடந்த 2000ம் ஆண்டில் ஏனாதி பாலசுப்பிரமணியன் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, நகரில் புதிய சட்டமன்ற அலுவலகம் கட்டப்பட்டு அப்போதைய அமைச்சர் கோசி.மணி திறந்து வைத்தார். 

 

அதன் பிறகு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி (தற்போது தமாகா) என்.ஆர்.ரெங்கராஜன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தனது பங்களாவில் ஒரு பகுதியில் செயல்படுத்தினார். ஆனாலும் மாதம் ஒருமுறையாவது அலுவலகப் பணியாளர்கள் வந்து சுத்தம் செய்து செல்வார்கள். 

 

officers sealed the bushy legislator office

 

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற வழக்கறிஞர் சி.வி.சேகர், அரசு செலவில் கட்டி வைத்துள்ள தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பக்கமே போகாமல், நீதிமன்றம் எதிரே உள்ள தனது நோட்டரி பப்ளிக் அலுவலகத்திலேயே ஒரு அறையை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இவரது ஆட்கள் கூட அலுவலகத்தை எட்டிப் பார்க்காததால் பல வருடங்களுக்கு முன்பு பூட்டிய பூட்டுகள் கூட துருப்பிடித்து கிடக்கிறது.

 

அலுவலக கதவுகளில் காட்டுக் கொடிகள் படர்ந்து, கதவுகள் இருப்பதே தெரியாமல் உள்ளது. அந்தத் தெருவில் உள்ள பூச்சி, பாம்புகள் அடையும் புதர் மண்டிய மர்ம கட்டடமாக வைத்துள்ளார். திமுக ஆட்சியில் திறந்ததால் தொகுதி  அலுவலகத்தை தொடர்ந்து புறக்கணித்து, கட்டடத்தை சேதமடைய செய்துள்ளனர் சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த நிலையில்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், கடமையே கண்ணாக உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகள், புதருக்குள் மறைந்துள்ள மர்ம கட்டடத்திற்கு சீல் வைத்துள்ளனர். இதைப் பார்க்கும் வாக்காளர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்