மின் கம்பியில் உரசிய மரத்தை வெட்டியபோது மின்சாரம் பாய்ந்து இளம் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வேளாங்கண்ணி பகுதி மக்களிடையே சோகத்தை உண்டாக்கியிருக்கிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள பிரதாபராமபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சபரி கிருஷ்ணன் (27). இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மின்சார வாரியத்தில் கேங்மேனாக பணியில் சேர்ந்து, வேளாங்கண்ணி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றிவந்தார்.
இந்த நிலையில், நாகையை அடுத்துள்ள பறவை - வடவூர் சாலையில் தொடர்ந்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து மின் தடைக்கு காரணமான மரங்களை வெட்டும் பணியில் சபரி கிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின் கம்பத்தில் கருவை மரம் உரசியதால் மின்தடை ஏற்பட்டதை அறிந்த மின்வாரிய ஊழியர்கள், உயர்மின் வழிப்பாதையில் மின்சாரத்தை நிறுத்தாமல் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சபரி கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை அருகில் இருந்த ஊழியர்கள் உடனடியாக நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சபரி கிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து நாகை மருத்துவமனைக்கு வந்த சபரி கிருஷ்ணனின் உறவினர்கள் மின்சார வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலைப் பெற மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை உதவி பொறியாளர்கள் மலர்வண்ணன், சித்திவிநாயகர் இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். உயிரிழந்த சபரி கிருஷ்ணனுக்கு அடுத்த மாதம் 20ஆ ம் தேதி திருமணம் நடைபெற இருந்தநிலையில், பரிதாபமாக உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.