புதுச்சேரியில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த 25ஆம் தேதி மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. பொதுவாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மதுபானங்கள் விலை கூடுதலாக இருக்கும். புதுச்சேரியில் விலை குறைவாக இருக்கும். இதனால் அவ்வப்போது தமிழக எல்லையான கடலூர், விழுப்புரம் உப்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுச்சேரிக்குச் சென்று மது குடிப்பது, மதுபாட்டில்களைத் திருட்டுத்தனமாக அங்கிருந்து கடத்தி வருவது என இப்படிப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் காவல்துறையின் கெடுபிடி அதிகமாக உள்ளதாலும் சாலைகளில் பல்வேறு சோதனைச் சாவடிகள் தடுப்புகள் உள்ளதால் புதுச்சேரி சரக்கு குடிக்கச் செல்லும் மதுப் பிரியர்கள் வாகனங்களில் சாலை வழியாகச் செல்வதற்கு முடியாததால் பெண்ணையாற்றின் குறுக்கே தண்ணீரில் இறங்கி அதைக் கடந்து சென்று புதுச்சேரி மாநிலத்தில் சரக்கடித்துவிட்டு திரும்பி வருகின்றனர்.
ஏற்கனவே போதையில் பலரும் திரும்பி வரும்போது ஆற்றின் தண்ணீரில் விழுந்து இறந்து போன சம்பவங்கள் நடந்துள்ளன. அதுபோன்று சம்பவங்கள் நடக்கக் கூடாது என்ற நிலையில் கடலூர் மதுவிலக்கு போலீசார், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆற்றில் இறங்கும் இடத்தில் நின்று கொண்டு மதுப் பிரியர்களை அவ்வப்போது விரட்டியடித்தனர். இதையும் மீறி செல்பவர்களைத் தடுப்பதற்காக போலீசார் ஆற்றங்கரை ஓரம் முட்செடிகளை வெட்டிப்போட்டு தடுத்தும் கூட பார்த்தனர். அதையும் மீறி போலீசாருக்குத் தெரியாமல் பதுங்கி ஒதுங்கி ஆற்றில் இறங்கி அக்கரைக்குச் சென்று மது குடித்துவிட்டு வரும் நபர்கள் அதிகரித்த படியே உள்ளனர்.
இதையொட்டி புதுச்சேரி போலீசார் பெண்ணையாற்றின் புதுச்சேரி மாநில எல்லையிலும் கடலூர் மாவட்ட போலீசார் இக்கரையிலும் நின்றுகொண்டு ஒலிபெருக்கி மூலம் குடிப்பதற்காக ஆற்றில் இறங்கி உயிரைப் பணயம் வைத்து செல்ல வேண்டாம், ஆற்றில் தண்ணீர் அதிகளவு உள்ளது, அதில் இறங்கிச் சென்று மது குடிக்கும் ஆசையில் உயிரை விட்டுவிடாதீர்கள், உங்களுக்கு மனைவி குடும்பம் பிள்ளைகள் உறவினர்கள் என உங்களை நம்பி பலர் இருப்பார்கள், எனவே அவர்கள் வாழ்க்கையை எண்ணிப்பார்த்து திரும்பி வாருங்கள் என்று எச்சரிக்கை செய்து வருகின்றார்கள்.