Skip to main content

“தெலுங்கு மக்களை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை” - மன்னிப்பு கேட்ட நடிகை கஸ்தூரி!

Published on 05/11/2024 | Edited on 05/11/2024
actress Kasthuri apologized It was not my intention to offend Telugu people

பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று முன்தினம் (03.11.2024) சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார். இதில் ஆடிட்டர் குருமூர்த்தி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் தொடர்பாக பேசிய பேச்சுகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருந்தது. அதே சமயம் இவர் மீது சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் தான், தெலுங்கு பேசும் மக்கள் குறித்த தனது பேச்சு திரிக்கப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி நேற்று (04.11.2024) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் தெலுங்கு மக்கள் குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் வந்துள்ளன. நான் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் மகத்தான பெருமை கொண்ட உண்மையான தேசியவாதி. நான் எப்போதும் சாதி, பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பை கொடுத்துள்ளனர்.

நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சூழல் சார்ந்தவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்திற்கு பொதுவானவை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். தெலுங்கு மக்களை புண்படுத்துவது எனது நோக்கமாக இருந்ததில்லை. கவனக்குறைவான எனது பேச்சின் மூலம் ஏதேனும் வருத்தம் ஏற்பட்டால் அதற்கு வருந்துகிறேன். எனவே அனைவரின் நலன் கருதி, நவம்பர் 3 அன்று ஆற்றிய உரையில் தெலுங்கு மக்கள் தொடர்பான அனைத்து பேச்சுகளையும் திரும்பப் பெறுகிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்