கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னாலகரம் கிராமத்தில் தெற்கு தெருவில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் காலையும், மாலையும் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மர்ம நபர்கள் குடிநீர் தொட்டியில் பூச்சிக்கொல்லி மருந்தினை ஊற்றியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீருக்காக கிருஷ்ணமூர்த்தி என்பவர் குழாயடியில் காத்திருந்தார். அப்போது குடிநீர் குழாயில் இருந்து வெள்ளை நிறத்தில் பூச்சிக்கொல்லி மருந்துடன் கலந்த தண்ணீர் வெளியே வந்துள்ளது. இதுகுறித்து அவர் மற்றவர்களிடம் கூற, அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஊ.மங்கலம் காவல்துறைக்கும், ஊராட்சி நிர்வாகத்துக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் குடிநீரை யாரும் பருக வேண்டாம் எனவும், குடிநீரை வெளியேற்ற வேண்டும் என்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீரை முற்றிலும் வெளியேற்றி ஊ.மங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். ஊராட்சியில் வழங்கப்படும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தனிநபர் முன்விரோதம் காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது சதி காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா? என ஊ.மங்கலம் காவல்துறையினர் பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.