இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் படுகொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், முருகன் மனைவி நளினி என 7 பேர் வேலூர் மத்திய சிறை, புழல் சிறை, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனை 27 ஆண்டுகளுக்கு பின்பு ஆயுள்தண்டனையாக குறைத்துள்ளது உச்சநீதிமன்றம். கடந்த 29 வருடங்களாக சிறையில் ஏழு பேரும் மனவேதனையில் உழன்று வருகின்றனர்.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசே முடிவெடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துவிட்டது உச்சநீதிமன்றம். தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்து ஓராண்டு கடந்த நிலையில் தற்போதும் அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் வைத்துள்ளார் ஆளுநர். இதுப்பற்றி பல தரப்பினர் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என குரல் கொடுத்தும், போராடியும் இதுவரை முடிவெடுக்கவில்லை.
இந்நிலையில் இவர்களை பரோலிலாவது விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலதரப்பில் இருந்து தமிழகரசை நோக்கி சென்றதால் சிறையில் உள்ள ஒவ்வொருவரை ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒரு மாதம் முதல் 45 நாட்கள், என பரோல் வழங்குகிறது சிறைத்துறை.
இந்நிலையில் கடந்தாண்டு தனது தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை சரியில்லை எனச்சொல்லி பரோல் பெற்ற பேரறிவாளன் 45 நாட்கள் பரோலில் வெளியே வந்து ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்து பின்னர் சிறைக்கு சென்றார்.
ஓராண்டு முடிந்த நிலையில் அவரது தந்தை உடல்நலம் பாதிப்படைந்துள்ளதாலும், பேரறிவாளன் சகோதரியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அவரது தாய் அற்புதம்மாள், தனது மகனுக்கு பரோல் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
அதனடிப்படையில் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நவம்பர் 12ந்தேதி வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
இன்று முதல் 30 நாட்கள் பரோலில் தனது வீட்டில் தங்கவுள்ள பேரறிவாளனுக்கு நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 28 ஆண்டுகளில் இரண்டாவது முறை பரோலில் அவர் வருவது குறிப்பிடத்தக்கது. பரோல் முடியும் காலம் வரை அவரது வீட்டிற்கு திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேல் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர் இரண்டு எஸ்.ஐ உட்பட 35 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பேரறிவாளன் வீடு உள்ள பகுதிக்கு 3 தெருக்கள் வழியாக வரலாம், அந்த மூன்று தெருக்களிலும் போலீஸார் தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அந்த சாலை வழியாக யார் சென்றாலும் விசாரித்த பின்பே அனுப்புகின்றனர்.
தனது மகன் பரோலில் வெளிவந்துள்ளது குறித்து அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசும் போது, "இரண்டாவது முறையாக என் மகன் பரோலில் வெளியே வருகிறான். அது எனக்கு மகிழ்ச்சி தான். இருந்தாலும் விடுதலையாகி அவன் வெளியே வரும்போது தான் முழுமையாக மகிழ்ச்சியடைவேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த பரோலுக்கு காரணமான அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம், என் மகனுக்கு இந்த அரசு விடுதலை வாங்கி தரும் என நம்புகிறோம்" என்றார்.