சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(8.5.2018) அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னதாக நீட் கொடுமையினால் உயிரிழந்த கிருஷ்ணசாமி, கண்ணனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையான “நீட்"" தேர்வினை எல்லா வகை எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணித்து, வேறு வழியின்றி நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், முன்கூட்டியே முறையாகத் திட்டமிடப்படாத குழப்பத்தின் உச்சகட்டமாக, கேரள மாநிலத்திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும், சிக்கிம் மாநிலத்திலும் தேர்வு மையங்களை ஒதுக்கி மத்திய இளநிலை பள்ளிக் கழகம் (சி.பி.எஸ்.இ) எதிர்பாராததொரு தாக்குதலை தமிழக மாணவர்கள் மீது தொடுத்து எவராலும் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து விட்டது. மத்திய அரசின் இந்த துரோகச் செயலுக்கு அ.தி.மு.க. அரசு எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல், மத்திய அரசின் நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்தது.
அந்த துரோகத்தின் விளைவாகவும், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியதாலும், சி.பி.எஸ்.இ விதித்த அவமானப்படுத்தும் கெடுபிடிகளாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களும், மாணவ- மாணவிகளும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். நீட் தேர்வு மன உளைச்சலின் காரணமாக திருத்துறைப்பூண்டி மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி - சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணன் - கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த மாணவி சுவாதியின் தந்தை சீனிவாசன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்ததை இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.
இவர்களது துயர மரணத்திற்கும் - அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.