Skip to main content

தஞ்சைப் பெருவுடையார் கோயில் சதய விழாவில் தமிழில் பூசை செய்ய வேண்டும்! பெ.மணியரசன் கோரிக்கை!

Published on 22/10/2020 | Edited on 23/10/2020
P MANIYARASAN STATEMENT

 

தஞ்சை பெருவுடையார்கோயில் சதய விழாில் தமிழில் பூசைகள் செய்ய வேண்டும் என்று தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்ப் பேரரசன் இராசராசன் பிறந்த நாள் விழாவான சதய விழாவை இவ்வாண்டு 26.10.2020 திங்கட் கிழமை ஒருநாள் நிகழ்வாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை முடிவு செய்ததைத் தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் வரவேற்கிறேன். கொரோனா காலம் என்பதால், பட்டிமன்றம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளை இவ்வாண்டு தவிர்த்ததும் சரியான முடிவே.

பேரரசன் இராசராசனின் 1035ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவாக நடைபெறும் இவ்விழாவின் போது, மூலவரான பெருவுடையார் கருவறையிலும், மற்ற தெய்வ பீடங்களின் கருவறையிலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூசை செய்வதே பேரரசனுக்குச் செலுத்தும் சிறந்த நன்றிக் கடனாகும். சிவன் கோயிலுக்குரிய அர்ச்சனைத் தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தேவாரம், திருமந்திரம் முதலிய கருவறை அர்ச்சனை மந்திரங்களில் கற்றுத்தேர்ந்த, தமிழ் ஓதுவாமூர்த்தி உள்ளார். தேவையானால் வெளியிலிருந்து மூத்த ஓதுவாமூர்த்திகளை அழைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது கருவறையில் அர்ச்சனை செய்து கொண்டிருப்பவர்களையும் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்ய வழி காட்டலாம். எமது இந்த வேண்டுகோளானது தமிழ்நாடு அரசின் – இந்து அறநிலையத்துறையின் கோயில் கருவறை அர்ச்சனை விதிமுறைகளுக்கு உட்பட்டதே!

கடந்த 05.02.2020 அன்று நடைபெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கில் கருவறையிலும் கலசத்திலும் தமிழ் மந்திரம் ஓதி அவ்விழாவை நடத்திட ஆணை இடக்கோரி, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் நானும், மற்றவர்களும் தொடுத்த (W.P.(MD) No.1644 of 2020) வழக்கில் 31.01.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தமிழிலும் சமற்கிருதத்திலும் அர்ச்சனை செய்யுமாறு ஆணையிட்டது. அவ்வாணையின் படியே அக்குடமுழுக்கு தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்தப்பட்டது.

இப்பொழுது நடைபெறவுள்ள தஞ்சைப் பெரியகோயில் சதயவிழாவிலும் பெருவடையார் கருவறை மற்ற தெய்வங்களின் கருவறைகள் அனைத்திலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூசை செய்ய ஏற்பாடுகள் செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களையும், அதிகாரிகளையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கர்நாடகத்துக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும்'-பெ.மணியரசன் பேட்டி

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

nn

 

தமிழ்த் தேசிய பேரியக்க மாநில தலைவர் பெ.மணியரசன் சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''மேட்டூர் அணையில் நீர்மட்டம் 77 அடி குறைந்துள்ளது வேதனையாக உள்ளது. தமிழ்நாடு நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய 9.19 டிஎம்சி நீரும், ஜூலை மாதம் திறந்துவிட வேண்டிய 31.24 டிஎம்சி நீரும் திறந்து விடப்படவில்லை. கர்நாடகம் தங்களுக்கு நீர் போதவில்லை கூறுகின்றனர். தற்போது அளவில் உள்ள நீர் விகிதாசார அடிப்படையிலாவது நீர் திறந்து விடப்பட வேண்டும், எனவே தமிழக அரசு கர்நாடகத்திற்கு வல்லுநர் குழுவை அனுப்பி இருக்கின்ற நீரை பகிரக் கர்நாடக அரசை வற்புறுத்த வேண்டும். தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர் பாழாகி உள்ளது. தோழமை கட்சியான காங்கிரஸை, திமுக கர்நாடக அரசிடம் பேசி நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கர்நாடகத்துக்கு எதிராகப் பொருளாதார தடையை தமிழக அரசு விதிக்க வேண்டும்.

 

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. காவிரி நதி நீர் ஆணைய தலைவர் ஹல்தர் அணை கட்ட கர்நாடக அரசின் ரூ.9 ஆயிரம் கோடி செலவிலான திட்ட அறிக்கையை ஏற்று சுற்றுச்சூழல் துறைக்கும், காவிரி நிதி நீர் ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெயரளவிற்கு டெல்லி சென்று மனு அளித்து வந்துள்ளார். கடந்த காலங்களில் கர்நாடக அரசு பல அணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வர வேண்டிய நீரை தடுத்துள்ளது. தற்போது 66 டிஎம்சி அளவிலான மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட வராது, காவிரி பாலைவனமாக மாறிவிடும். அதைத் தடுக்க காவிரி பங்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்தி தமிழக அரசு தடை பெற வேண்டும்.

 

பொது சிவில் சட்டத்தை, பாஜக அரசு கொண்டு வருவதால் அச்சம் உள்ளது. இந்துக்களை ஒன்றாகத் திரட்டும் தந்திரமாகத் தெரிகிறது. சட்டம் குறித்து முழு விவரம் தெரிவிக்காமல் மக்களிடையே கருத்து கேட்பது சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருக்கும் என்ற அச்சம் உள்ளது. திருமண வயது, திருமண முறிவு, வாரிசுரிமை போன்றவற்றில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவைதான், எனவே பாஜக அரசு சட்டம் பற்றிய முன்மொழிவுகளை மக்கன் முன் விவாதத்தற்கு முன் வைக்க வேண்டும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அச்சட்டத்தை ஏற்க விரும்புவோர் ஏற்றுச் செயல்படுத்தலாம். ஏற்க விரும்பாதோர் அவர்களின் மத வழக்கப்படி திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்திக் கொள்ளலாம் என விருப்பத் தேர்வு உரிமை இருக்க வேண்டும்.

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்குவதை விட, அவரது ஆளுநர் பதவியையே நீக்க வேண்டும். அமெரிக்கா, ஜெர்மனி, சுவிஸ், கனடா போன்ற கூட்டாட்சி நாடுகளில் மாநில சட்டப்பேரவையை கலைக்கும் அதிகாரம் கூட்டாட்சிய மைய அரசுக்கு இல்லை. எனவே சமத்துவமான மாநில உரிமைகளைக் கொண்ட உண்மையான கூட்டாட்சியாக மாற்ற புதிய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவிற்கு தேவை. மேற்கொண்ட கோரிக்கைகள் குறித்து தமிழக முழுவதும் பரப்புரையை ஆகஸ்ட் மாதம் நடத்துவது எனத் தீர்மானித்துள்ளோம்'' என்றார்.

 

பேட்டியின்போது மாநில பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், துணைப் பொதுச்செயலாளர் க.அருண்பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

 

Next Story

“சாய்ந்த கோபுரத்தை கொண்டாடும் நாம், தஞ்சை கோவிலை கண்டுகொள்வதில்லை” - விக்ரம் வேதனை

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

vikram talk about cholas and Brihadeeswara Temple ponniyin selvan press meet

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. 

 

அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விக்ரமிடம், வரலாற்றை தெரிந்துகொள்வதன் அவசியம் என்ன? அதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த விக்ரம், “நாம் எகிப்த் பிரமிடுகளை எப்படி கட்டி இருப்பார்கள் என்று பேசிக்கொண்டும், யோசித்துக் கொண்டும் இருக்கிறோம்.  ஆனால் நாம் இந்தியாவில் நிறைய கோவில்கள் உள்ளன. உலகிலேயே மிக உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் என்றால் அது தஞ்சை பெரிய கோவில்தான். சோழ மன்னர் ராஜராஜ சோழன் அந்த கோவிலை காட்டினார். அந்த கோவிலின் உச்சியில் இருக்கும் கல்லின் எடை மட்டும் 80 டன் கொண்டது. பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தை பார்த்து நாம் வியப்படைந்து பாராட்டுகிறோம். ஆனால் தஞ்சை பெரிய கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக 6 பூகம்பங்களை  தாண்டி இன்று வரை நிலைத்து நிற்கிறது. அது எப்படி என்றால், முதலில் சுற்றுச்சுவர், பின்னர் 6 அடி நீளத்துக்கு தாழ்வாரம் அமைத்து அதன்பின்னர் மையப்பகுதியில் கோவிலை கட்டி உள்ளனர். அதனால் தான் அது இத்தனை பூகம்பங்களையும் தாண்டி இன்றளவும் நிலைத்து நிற்கிறது. 

 

எந்த விதமான பிளாஸ்டர்களும் இல்லாமல் கட்டப்பட்டது. எந்தவித இயந்திரமும் இல்லாத அந்த காலத்தில் யானைகள், காளைகள் மற்றும் மனிதர்களின் உதவியுடன் மட்டுமே கட்டப்பட்டது.  அத்துடன் ராஜராஜ சோழன் அவரது ஆட்சி காலத்தில் 5 ஆயிரம் அணைகளை காட்டியுள்ளார். நீர் மேலாண்மைக்கு தனித் துறையை அமைத்துள்ளார். இலவச மருத்துவமனை காட்டியுள்ளார். நதிகளுக்கு பெண்களின் பெயரையும் சூட்டியுள்ள அவர்கள், அந்த காலத்திலேயே தேர்தல்களும் நடத்தியுள்ளனர். 

 

இதெல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இவையனைத்தும் 9 ஆம் நூற்றாண்டில் நடந்தவை. இதற்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டு பிடித்துள்ளார். இதன் மூலம் நாம் எந்த  அளவு பெருமை மிகு கலாச்சாரத்தை பின்பற்றியிருக்கிறோம் என்று வியப்பாக இருக்கிறது. இதெல்லாம் நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.  இதில் வட இந்தியா, தென் இந்தியா பிரித்து பார்க்கக்கூடாது. இந்தியர்கள் அனைவரும் இதனை கொண்டாட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.