வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு திருப்பத்தூர் மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 28.11.19 அன்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைப்பெற்று வந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற முதல் குறை தீர்வு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளகுறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் எனச்சொல்ல, அதன்படி தமிழக மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை என்பதால், மீண்டும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இன்று தற்காலிக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் நேரடியாக கொடுத்தனர்.
திருப்பத்தூர் அடுத்த சின்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாசம் என்பவரது மனைவி செல்வி என்பவர் தனது எட்டு மாத கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்தார். அதில் தனது கணவர் ஒரு மாதத்திற்கு முன்பு விபத்தில் பலியாகினர். எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுயிருந்தார். மனுவை வாங்கி படித்த மாவட்ட ஆட்சியர் சிவனருள், அந்த பெண்மணியை காத்திருக்க சொன்னார்.
உடனடியாக சமூக நலத்துறை அதிகாரிகளிடம் பேசி, அந்த பெண்ணிடம் உள்ள ஆவணங்களை வாங்கி ஆய்வு செய்தனர் அதிகாரிகள். அவர் வைத்திருந்த ஆவணங்கள் சரியாக இருந்ததை பார்த்து, உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவி தொகை வழங்க உத்தரவிட்டு ஆணையை வழங்கினார் மாவட்ட ஆட்சியர். கோரிக்கை மனு தந்த ஒரு மணி நேரத்தில் தனது பிரச்சனை தீர்ந்ததை தொடர்ந்து அந்த பெண் கண்ணீர் விட்டு அழுது, நன்றி தெரிவித்து ஆணையுடன் வீட்டுக்கு சென்றார்.